1280.

     என்றும்உனக் காளாவேன் என்நெஞ்சே வன்நெஞ்சர்
     ஒன்றும்இடம் சென்றங் குழலாதே - நன்றுதரும்
     ஒற்றிஅப்பன் பொன்அடியை உன்னுகின்றோர் தம்பதத்தைப்
     பற்றிநிற்பை யாகில் பரிந்து.

உரை:

     எனது நெஞ்சே, வன்மையான நெஞ்சமுடையார் இருக்குமிடம் அடைந்து உழலாமல், நன்மை தரும் ஒற்றியப்பனாகிய சிவனது அழகிய அடியைச் சிந்திப்போரது திருவடியைப் பரிந்து பற்றி நிற்பாயாயின், எந்நாளும் உனக்கு ஆளாய்ப் பணி செய்வேன், காண்க. எ.று.

     இரக்கமில்லாத கற்போன்ற வலிய நெஞ்சமுடையார்பால் கடுமையான சொல்லும் வெவ்விய செயலுமே உளவாதலின், அவர் உறையுமிடத்துக்குச் சென்று பயிலுவதை விட்டொழிக என்பாராய், “வன்னெஞ்சர் ஒன்றுமிடம் சென்று அங்கு உழலாதே” என்கின்றார். உழலுதல் - மெய்வருந்தத் திரிதல். நன்மை - ஞானப் பயன். திருவொற்றியூரில் எழுந்தருளும் சிவனை “ஒற்றியப்பன்” என உரைக்கின்றார். பொன்னடி - பொற்றாமரை போன்ற திருவடி. சிவன் மேனி பொன்னிறமாதலின், தாமரை போலும் அவன் திருவடி பொற்றாமரை போல்வதாயிற்று. உன்னுகின்றோர் - சிந்திப்பவர், சிவனடியைச் சிந்திப்போர் திருவடி சிவனடியின் சிறப்பனைத்தும் உடையதாகலின், “உன்னுகின்றோர் தம்பதத்தைப் பரிந்து பற்றி நிற்பையாகில்” என்றும், அது சிவனடியை யடைந்த பயனை நல்குமாதலின், “என்று முனக்காளாவேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், சிவனுடைய அடியார்க் கடியைப் பற்றிச் சிந்தித்து வாழ்ந்தால் சிவம் பெறலாம் என நெஞ்சிற்கு அறிவுறுத்தியவாறாம்.

     (7)