1281.

     பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
     எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து
     விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர்
     புடையானை நெஞ்சமே போற்று.

உரை:

      நெஞ்சமே, உன்பால் அன்புகொண்டு சொல்லுகிறேன், கேள், நாம் செய்துள்ள பாவங்களெல்லாம் எரிந்து சாம்பராய்க் கெடவும், நாம் உயர்ந்த கதி பெறவும் நல்வழியாவது ஆராய்ந்து கண்டு, எருதையூர்தியாக வுடையவனும் திருவொற்றியூரில் எழுந்தருளும் வித்தகனும் உமாதேவியை ஒரு புடையில் உடையவனுமாகிய சிவபெருமானையே போற்றுவாயாக. எ.று.

     பாவம் - துன்பத்துக் கேதுவாகிய தீவினைகள், இவை முன்பொரு காலத்தே செய்யப்பட்டுப் பயன் ஊழ்த்து நிற்பன; இறைவன் ஆணைப்படி இவை நுகர்ந்து கழியற் பாலனவும், திருவருளால் சார்பு கெடுக்கப் பெற்று அழியற் பாலனவுமாம். திருவருள் நம்மை உயர் கதியில் உய்த்து விடுமாயின் பாவவினைகட்குப் பற்றுக்கோடு கெடுதலின் அழிந்துபோம் என்றற்கு, “நாம் கதியிலேறப் பாவங்களெல்லாம் எரிந்து விழத் தெரிந்து போற்று” என இயைக்க. வித்தகன் - ஞானப் பொருளாயவன். “சார்புணர்ந்து சார்பு கெட வொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்” என்ற திருக்குறட் கருத்து இங்கே எண்ணத் தக்கது.

      இதன்கண், செய்த பாவங்கள் தீர்ந்து கெடத் திருவொற்றியூர்ப் பெருமானைத் தெரிந்து போற்றுவது நலம் என்பதாம்.

     (8)