1282. போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை
ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர்
அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச்
செவ்வண்ணத் தானைத் தெரிந்து.
உரை: என்னுடைய நெஞ்சமே, மூன்றாகிய மதில்களை நகைப்பினாற் சுட்டெரித்தவனும், எருதேரும் பெருமானும், எம்மை யாளாக வுடையவனும், திருநீற்றின் வெள்ளிய ஒளி திகழும் அழகிய வண்ணமுடையவனும், அழகிய சோலை சூழ்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவந்த நிறத்தையுடையவனுமாகிய சிவபெருமானை மெய்ப்பொருளெனத் தெரிந்து போற்றுவாயாக. எ.று.
வேதங்களும் புராணங்களும் இதிகாசங்களும் தேவர்கள் பலரைச் சிறப்பித்துத் தனித்தனியே முதல்வர்களெனப் புகழ்கின்றனவாதலால், மெய்யுணர்வால் ஆராய்ந்தறிதல் வேண்டுதல் பற்றி, “தெரிந்து போற்றுதி” என்று அறிவுறுத்துகின்றார். புரம் - மதில். நகை - நகைப்பு. மலை வில்லாக வளைந்தது கண்டு நகைத்தபோது தீத்தோன்றிப் புரத்தை யெரித்துச் சாம்பராக்கினமை புலப்பட “புரம் நகையாற் சுட்டவனை” என்கின்றார். எருதின்மேல் விரும்பியிவர்தல் விளங்க, “ஏற்றுகந்த பெம்மான்” என்று சொல்லுகின்றார். எம்மவன் - எம்மைத் தனக்கு ஆளாக வுடையவன். அவ்வண்ணம் - அழகிய வண்ணம். செவ்வண்ணம் - சிவந்த நிறம்.
இதனால், வேத புராண இதிகாசங்கள் கூறினும், ஆராய்ச்சியைச் செய்து சிவனை மெய்யெனத் தெரிந்து வழிபடுக என்பதாம். (9)
|