1283. தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன்
விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் - பரிந்தநெற்றிக்
கண்ணானை மாலயனும் காணப் படாதானை
எண்ணாரை எண்ணாதே என்று.
உரை: எங்கும் எப்பொருளினும் பரந்து ஓடுகின்ற நெஞ்சமே, திருவொற்றியூரில் எழுந்தருள்கின்ற அன்பு செய்யும் நெற்றியிற் கண்ணை யுடையவனும், திருமாலும் பிரமனும் காணப்படாதவனும் ஆகிய சிவபெருமானை எண்ணாத கீழ்மக்களை நன்கு மதித்தலைச் செய்யாதே என்று உனக்கு அளவிறந்த வணக்கத்தைச் செய்கின்றேன்; அறிக. எ.று.
அணுவினும் சிறியது போலத் தோன்றினும் எங்கும் எல்லாப் பொருளிலும் விரிந்து பரந்து நினைத்தலைச் செய்வது பற்றி, “விரிந்த நெஞ்சே” என்று விளம்புகின்றார். ஒற்றியூர், ஒற்றியென நின்றது. சிவபெருமானுடைய நெற்றி மிகவும் அகன்று அன்பு பரப்பும் இயல்பிற் றென்றற்குப் “பரிந்த நெற்றி” என்று கூறுகின்றார். சிவனை நினையாதார் கூட்டம் சிவநெறி யொழுக்கத்திலும், சிவன்பாலன்பு செய்வதிலும் சிந்தையைச் செல்லவிடா தென்றற்குச் சிவனை “எண்ணாரை எண்ணாதே என்று” சொல்லுகின்றார். தெண்டன் - வணக்கம்; கும்பிடுதலுமாம். அனந்தம் - அளவின்மை. நல்லது செய்யாமையின் தீது செய்தல் பொல்லாதென்பது பற்றி இவ்வாறு கூறுகின்றார்.
இதனால், சிவனை நினையாதவரை நினையாமை நன்று என்பதாம். (10)
|