1284.

     என்றென் றழுதாய் இலையேஎன் நெஞ்சமே
     ஒன்றென்று நின்ற உயர்வுடையான் - நன்றென்ற
     செம்மைத் தொழும்பர்தொழும் சீர்ஒற்றி யூர்அண்ணல்
     நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்.

உரை:

      என்னுடைய நெஞ்சமே பரம்பொருளாம் தன்மையில் ஒன்று என நிற்கின்ற உயர்வுடையவனும், அறமென்று நூல்கள் புகழும் செம்மைப் பண்புடைய அடியார்கள் தொழுதெழும் சிறப்புடைய திருவொற்றியூரில் எழுந்தருளும் அண்ணலுமாகிய சிவபெருமான், நம்மைத் தனக்கு அடியராகக் கொள்ளும் நாள் என்றோ என நீ அழுகின்றாயில்லையே. எ.று.

     மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் தலைப்படுவோர், ஒன்றோ, இரண்டோ, பலவோ என ஆராய்ந்து துணிவு பிறவாது தடுமாறுவது இயல்பு. பொருட்டன்மையிலும் ஒன்றாய அஃது உருவமோ, அருவமோ, அருவுருவமோ என மயங்குவோர் பலர். இந்நாளில் மெய்ப்பொருளாராய்ச்சி ஒன்றென்றபதுவே தக்கதென்ற முடிவுக்கு வந்துள்ளமையின், “ஒன்றென்று நின்ற உயர்வுடையான்” என வுரைக்கின்றார். செம்மைப் பண்பு மாறா வியல்பிற்றாய்ச் சிவம் பயப்பதாய் உள்ளமை பற்றி, “நன்றென்ற செம்மை” என்று நவில்கின்றார். “செம்மையாய சிவம்” என்ற மணிவாசகப் பெருமானும் எடுத்துரைக்கின்றார். செம்மைத் தொழும்பர் என்றது நெஞ்சிற் சிவம் பழுத்த தொண்டரைக் குறிப்பதாகக் கோடலும் ஒன்று. தொழும்பு கொளல் - தொண்டு கொளல். சிவத் தொண்டர் திருவுள்ளத்தே சிவன் கோயில் கொள்கிறான் என்று சான்றோர் உரைப்பதனால், தொண்டு கொள்ளும் நாளை மெய்யடியார் பெரிதும் விரும்புகின்றார்கள்; அதனை நினைந்தே, வள்ளற் பெருமான், “நம்மைத் தொழும்பு கொள்ளும் நாள் என்றென்று அழுதாய் இலையே” எனக் கூறுகின்றார்.

      இதனால், சிவன் நம்மைத் தொழும்பு கொள்ளும் நாளை நினைந்து அழுதல் நன்று என்பதாம்.

     (11)