1285.

     நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றிஅப்பன்
     தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும்
     தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம்
     பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு.

உரை:

      என்னுடைய நல்ல நெஞ்சமே, திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் அப்பனாகிய சிவனுடைய திருவடி யென்னும் பொற்றாமரை போலும் தண்ணிய தாள் மலர்க்கு ஆளாகிய சான்றோர்க்கு அடிமை செய்யும் பெரியருடைய சிறந்த சமுகத்தை வாழ்நாள் முடிவதற்குள் தரிசித்து மகிழ்வாயாக; அது நற்செய்கையாகும். எ.று.

     நல்லதொரு செய்கையைப் புரியுமாறு விழைகின்றாராகலின், “நன்னெஞ்சே” என்றும், தனக்கு வாழ்நாள் கழிவது நினைவில் இருப்பது புலப்பட, “நாளாகு முன்” என்றும் உரைக்கின்றார். ஒற்றியப்பனான சிவனது திருவடி பொற்றாமரை போன்ற நிறமும், இயற்கைத் தாமரைக்குரிய குளிர்ச்சியும் உடையதாகலின், “தாளாகும் தாமரைப் பொன் தண்மலர்” என்று சிறப்பிக்கின்றார். மனம் முதலிய கரண மூன்றும் தூயராயினாரைத் தீர்த்தர் என்பர். சிவன் திருவடிக்கு ஆளாகும் தூய நன்மக்களை வள்ளலார் தீர்த்தர் என்று குறிக்கின்றார். மனம் தூயராயினாரைத் தீர்த்தரென்பது சயினரும் பவுத்தரும் கையாளும் சொல் வழக்கு. வடலூர் வள்ளற் பெருமானும் சிவத்தொண்டர்க்குப் பல விடங்களில் இச் சொல்லைக் கையாளுகின்றார். தொண்டர்கட்குத் தொண்டு செய்வாரைக் காண்டல் சிவ புண்ணியமாம் என்பது பற்றி “சீர்ச்சமுகம் பார்த்து மகிழ்வாய்” என்றும், சிவ நெறிக்குரிய சீல வகைகளில் இதுவும் ஒன்று என்பது விளங்க, “அதுவே பாங்கு” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், சிவத் தொண்டர்க்குத் தொண்டராயினார் திருமுன்பைக் கண்டு மகிழ்வது சிவபுண்ணியம் என்பதாம்.

     (12)