1286. பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத்
தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள்
உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றிஅப்பன் பொன்அருளைப்
பெற்றமர்தி நெஞ்சே பெரிது.
உரை: நெஞ்சமே, சிவஞானப் பாங்குடைய நன்மக்கள் மெய்யில் விளக்கமுற்ற திருநீற்றை யணியாத குற்றமுடையவர் பொல்லாத வீட்டுக்குச் செல்வதை ஒழிக; புகழ் ஓங்கிய உமாதேவியார் பொருந்தியுள்ள ஒரு பாகத்தையுடைய எமது ஒற்றியப்பரது அழகிய திருவருளை மிகப்பெற்று அன்போடு வாழ்க. எ.று.
பாங்கென்றது - சைவம் வைணவம் முதலிய சமயப் பாங்கு. அவ்வச் சமயத்தவர் மெய்யிலணிதலால் விளக்கமுறுதலை “மெய்யிற் பலித்தல்” என மொழிகின்றார். திருநீறணியாமை குற்றமாதல் பற்றி, “திருநீறணியாத் தீங்கு” எனத் தெரிவிக்கின்றார். நீறணியாரைத் தீங்குடையார் என்றமையின், அவரது மனை “தீமனை” எனப்படுவதாயிற்று. புகழ் மிக்கவளாதலால் உமையம்மையை “ஓங்குடையாள்” என்று கூறுகிறார். பெறலருமை பற்றித் திருவருள் “பொன்னருள்” எனப்படுகிறது.
இதனால், திருநீறணியார் தீமனைக்குச் செல்லாமல் திருவருள் பெற்று வாழ்க எனல் செப்பியவாறு. (13)
|