1287.

     பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
     அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
     தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
     மேலானை நெஞ்சே விரும்பு.

உரை:

      நெஞ்சே, பெருமை யெல்லாம் உடையவனும், அழகிய பிறைத் திங்களை கண்ணியாக அணிந்தவனும், யாவர்க்கும் அருமையானவனும், கண்ணோட்ட மிக்கவனும், முழங்குகின்ற கரிய யானையின் தோலைப் போர்த்தவனும், சிறப்புடைய ஒற்றியூரில் எழுந்தருளும் சுண்ணம் போன்ற வெண்ணீற்றை யுடையவனும், யாவருக்கும் மேலானவனுமாகிய சிவனையே விரும்புவாயாக. எ.று.

           பெருமைப் பண்பு எல்லாவற்றிற்கும் உறைவிடமானவன் என்றற்கு “பெரியான்” எனவும், பிறைத் திங்களைச் சடைமுடிமேல் கண்ணியாக அணிவதுபற்றிப் “பிறைக் கண்ணியான்” எனவும் கூறுகின்றார். மாதர் பிறை - அழகிய பிறைத் திங்கள். தேவர் முனிவர்களுள் எத்திறத்தோர்க்கும் காண்டற் கரியவன் என்பது பற்றி, “அரியான்” என்கின்றனர். அங்கணன் - கண்ணோட்டம் மிக்கவன். சிவனுடைய சிறப்புப் பெயருள் அங்கணன் என்பது ஒன்று. கரியயானை என்பது, கரியானை என மருவிற்று. கரியாகிய யானை யென இருபெய ரொட்டாக உரைத்தலுமொன்று. சுண்ணம் - நுண்ணிய பொடி.

     இதனால், சிவன் பெயர் பலவும் சொல்லி அவற்றையுடைய சிவனை நீ விரும்புக என வற்புறுத்தியவாறு.

     (14)