1288. விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள்
அரும்பித் தளைந்துள் அயர்ந்தே - திரும்பிவிழி
நீர்கொண்டும் காணாத நித்தன்ஒற்றி யூரன்அடிச்
சீர்கொண்டு நெஞ்சே திகழ்.
உரை: நெஞ்சே, திருமால் காண விரும்பிப் பன்றியாய் பன்னெடுங் காலம் நீக்கரிய பித்துற்று மனம் தளர்ந்து திரும்பிப் போந்து கண்களில் நீர் சொரிந்து புலம்பியும் காணப்படானாகிய நித்தனும், திருவொற்றியூரில் எழுந்தருளும் பெருமானுமாகிய சிவனது திருவடிப் புகழை உச்சி மேற்கொண்டு விளக்கமுறுவாயாக. எ.று.
திருமால் பன்றியாய் விலங்குருக் கொண்டது விருப்பமுற்றே என்பதற்காக, “திருமால் விரும்பி விலங்காய்” என்றும், பன்னெடுங் காலம் நிலத்தைக் குடைந்து சென்றமை புலப்பட “நெடுநாள்” என்றும், பன்னாள் முயன்றும் கூடாமையால் கைவிடாது தொடர்ந்து முயன்றதற்குக் காரணம், சிவன் திருவடி முடியக் கண்டே தீர்தல் வேண்டுமென்ற தீரா வேட்கையாதல் விளங்க, “அரும் பித்த ளைந்து” என்றும் கூறுகின்றார். பித்து மிகக் கொண்டார் எனற்கு, “அரும்பித்து அளைந்து” என உரைக்கின்றார். மாட்டாமைக்கு வருந்தித் திருமால் கண்ணீர் சொரிந்தமையின், “திரும்பி விழி நீர் கொண்டும்” என விளம்புகின்றார். நெஞ்சம் மேன்மை பெற வேண்டின் இறைவன் திருவடியை உச்சிமேற் கொண்டு ஓங்க வேண்டும் என்ற அறவுரையை நினைவிற் கொண்டமையின், “ஒற்றியூரன் அடிச்சீர் கொண்டு நெஞ்சே திகழ்” என்று வற்புறுத்துகின்றார்.
இதனால், ஒற்றியூரன் திருவடியை முடியிற்கொண்டாலன்றிச் சீர் பெற முடியாது என்பது அறிவித்தவாறு. (15)
|