1289.

     திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
     புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
     ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
     வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.

உரை:

      நெஞ்சமே, விளங்குகின்ற ஞானத்தின் செஞ்சுடராயிருப்பவனும், தேவர்கள் புகழ்கின்ற தெய்வமும், போதிக்கும் அறிவாய் ஒளிர்கின்ற திருவொற்றியூரில் எழுந்தருளும் கனி போல்பவனும், உலக முழுதுமுடைய தலைவனும் வெற்றிக்குத் துணையாகுபவனுமாகிய சிவனையே நீ வேண்டுவாயாக. எ.று.

     சிந்தையின்கண் ஒளியாய்த் திகழ்வதுபற்றி, சிவஞாயிற்றை “ஞானச் செழுஞ்சுடர்” என்றும், வானுறையும் தேவர்கள் எக்காலத்தும் பரவுகின்ற தெய்வமாதலின், “வானோர் புகழ்கின்ற தெய்வம்” என்றும், போதமாவது, அறிவுறுத்தப்படும் அறிவுருவாய அறமாதலின், அற முதல்வனாம் ஒற்றிப் பரமனை, “போதம் திகழ்கின்ற ஒற்றிக்கனி” என்றும் உரைக்கின்றார். உலகுகட்கெல்லாம் தனி நாயகமாதல் புலப்பட, “உலகுடை நாயகம்” என்றும், பெறத்தக்க வெற்றிகளைப் பெற முயல்வார்க்கு இனிய துணை செய்பவன் என்பது நினைந்து, “வெற்றித் துணை” என்றும் அறிவித்து வேண்டச் சொல்லுகின்றார்.

     இதனால், ஒற்றிப் பரமன் உலகுடை நாயகனாதலின் வெற்றிக்குத் துணைபுரியுமாறு நெஞ்சே நீ வேண்டிக்கொள் எனப் புகல்கின்றார்.

     (16)