1290.

     வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர்
     தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை
     ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால்
     சென்றுதொழு கண்டாய் தினம்.

உரை:

      நெஞ்சே, வேண்டாமையும் வேண்டுதலுமில்லாத தவத்தோர் மனத்தில் தீண்டாதது யாதோ அதனை நீயும் நினையாதே; அவர் பால் ஆசையின்மை பொருந்துவது போல ஒற்றியூர் இறைவன்பால் சென்று மனம் ஒன்றித் தினமும் தொழுவாயாக. எ.று.

     எப்பொருளின்பாலும் விருப்பு வெறுப்பின்மை உயரிய தவமாகும். அத்தவமுடைய நல்லோர் எதனையும் மனத்தின்கட் கொள்ளார்; இதனை “வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர் தீண்டாமை யாது அது நீ தீண்டாதே” என்று கூறுகின்றார். தவமுடையோர் தீண்டாமை ஆசை, “ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்” என ஆன்றோர் கூறுதலின், “அது நீ தீண்டாதே” என மொழிகின்றார். ஆசை யற்ற விடத்துப் பற்றின்மை வந்து ஒன்றுமாதலின், தீண்டா விடத்து, “ஈண்டாமை ஒன்றும்” என்றும், அதுபோல ஒற்றியூரன்பால் மனமே நீ, சென்று ஒன்றுக என்பாராய், “ஒன்றுவ போல் ஒன்றித் தொழு” எனவும் உரைக்கின்றார். “ஈண்டு ஆமை ஒன்றுவபோல் ஒன்றி” யென இயைப்பினும் அமையும்.

     இதனால், தவமுடையோர் பால் பற்றின்மை ஒன்றுவதுபோல இறைவனிடம் மனம் சென்று ஒன்றுதல் வேண்டுமென்பதாம்.

     (17)