1291.

     தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர்
     மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும்
     வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப்
     போத மலரைநெஞ்சே போற்று.

உரை:

      நெஞ்சமே, நாளும் உள்ளம் உருகிச் சிறப்பை எடுத்துப் பாடும் அன்பர்களின் மனந்தோறும் ஓங்கி விளங்குகின்ற மணி போல்பவனும், கூட்டந் தோறும் வேதவொலி முழங்குகின்ற விரிந்த சோலை சூழ்ந்த ஒற்றிநகர்க்கண் ஞானமலராய் விளங்குகின்றவனுமாகிய சிவபெருமானைப் போற்றுவாயாக. எ.று.

     நாடோறும் இடையறவின்றிச் சிந்தித்துப் புகழே விரித்து மனமுருகிப் பாடும் அன்பர்களின் உள்ளத்தில் எழுந்தருளி ஞானவொளி வீசுவது பற்றித் “தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர் மனந்தோறும் ஓங்கும் மணி” என்று சிவனைக் குறிக்கின்றார். சிவன் சீரைச் சிந்திக்கும் போதே சிந்தை நீராய் உருகிப் பெருகுதல் விளங்க, “உள்ளுருகி” எனவும், உருகிய நீர் கண்ணீராய்ப் பெருகி வழிவதும், வாய் சிவன் புகழை அன்போடு பாடுவதும் இயல்பாதலின், “சீர்பாடும் அன்பர்” எனவும், உள்ளத் தெழும் அருளொளி முகத்தில் விளங்குதல் கண்டு, “மனந்தோறும் ஓங்கும் மணி” யெனவும் மொழிகின்றார். மலர்ச் சோலைகளில் வேதியர் கூட்டம் இருந்து மறை யோதுவது கண்ட வள்ளலார், “வேத மலர்கின்ற வியன்பொழில் சூழ் ஒற்றிநகர்” என உரைக்கின்றார். திருக்கோயிலைச் சூழவுள்ள சோலைகள் வேதமுழக்கம் செய்ய, கோயிலகத்தே ஓதப்படும் சிவஞான முழக்கம் ஞானமலராகிய சிவத்தை நினைவில் இருத்தி இன்பம் செய்தலின் “போதமலர்” என்றும், அதனைப் போற்றுக என்றும் அறிவுறுத்துகின்றார்.

     இதனால், அன்பர் அகத்து மணியாயும் கோயிற் கண் போதமலராயும் சிவம் அருள் புரிவது உணர்த்தியவாறு.

     (18)