1292. போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி
கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம்
கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு.
உரை: நெஞ்சமே, பகைவர் மதில்களை எரித்துச் சாம்பராக்கிய புண்ணியனும், தேவர்கள் நெருங்க மாட்டாத விடத்தை யுண்டு கண்டத் தடக்கிய ஆண்டகையும், கூற்றுவனது உயிரைக் கவரும் கழலணிந்த காலையுடைய குருமணியும், திருவொற்றியூரைத் தனக்கு இடமாகக் கொள்ளும் பரம் பொருளுமாகிய சிவன் திருப்பெயரையே கூறுக. எ.று.
போற்றார் - தேவர்கட்குப் பகைவர்களாகிய அசுரர். புரம் - மதில். பொடித்தல் - எரித்துச் சாம்பராக்குதல். அசுரர்களைக் கொன்று பாவம் உலகில் நிலவா வண்ணம் செய்தமையின், புரம் பொடி செய்த சிவனைப் “புண்ணியன்” என்று உரைக்கின்றார். ஆண்மையுடைய பிறர் எவராலும் செய்தற்கரிய செயல் செய்தமை பற்றி, ஆண்டகை என்று கூறுகின்றார். நஞ்சமுண்டும் தேவர்கள் இறந்தமையின், “ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்டகை” என்று இயம்புகின்றார். குருவாயினார் செய்யும் உபதேசம் பலவும் கூற்றுவன் கைப்படாதவாறு ஆவியைக் காத்துக் கொள்ளும் நெறியாகும். ஈண்டு நமன் உயிரையே குடித்தமை பற்றிச் சிவனை, “ஆவி கொள்ளும் கழற்கால் குருமணி” என்று சிறப்பிக்கின்றார். “பொருள்” எனப் பொதுப்படக் கூறினமையின் பரம் பொருள் என்று கொள்ளப்பட்டது.
இதனால், சிவன் செய்த ஆண்மைச் செயல் பலவினுள் புரமெரித்ததும், நஞ்சுண்டதும், நமனுயிர் குடித்ததும் சிறப்பாக நினைக்கத் தகுவன என்பதாம். (19)
|