1293. கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
நள்ளவனை நெஞ்சமே நாடு.
உரை: உமாதேவிக்குத் தன் உடம்பில் ஒரு கூறு அளித்த கோமானும், சிவந்த சடையில் கங்கையாற்றையும் கொன்றை மாலையையும் அணிபவனும், உண்மையுணரும் மெய்யுணர்வுடையார்க்கு மெய்ப்பொருளா யுள்ளவனும், திருவொற்றியூர்க்கண் நடுவேயிருப்பவனுமாகிய தியாகப் பெருமானை, நெஞ்சமே நீ நாடுவாயாக. எ.று.
உமாதேவிக்குத் தனது தேகத்தில் இடப் பக்கத்தைத் தந்து பெண்ணொரு பாகன் என்ற பெயர் பெற்றவனாதலின், “கூறுமையாட் கீந்தருளும் கோமான்” என்று கூறுகின்றார். கோமான் - தலைவன். மெய்யுணர்வுடைய மேலோரை, “தேறுமனம் உள்ளவர்கள்” என்று தெரிவிக்கின்றார். புனைந்துரையாகிய கற்பனை பலவும் நீக்கி, உள்ளதன் உண்மையை உள்ளவாறறியும் உரவோனாதலின் அவன் திரூமுன் யாவும் உள்ளது உள்ளபடியே தோன்றுவது மரபாதலை விதந்து, “உள்ளபடி யுள்ளவனை” என வுரைப்பாராயினர்.
இதனால், மெய்யுணர்வுடைய மேலோர்க்கு உள்ளபடியே தோன்றும் உண்மை வடிவினன் சிவன் என்பதாம். (20)
|