1294.

     நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர்
     கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
     சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
     உத்தமனை நெஞ்சமே ஓது.

உரை:

      நெஞ்சமே, எண்ணப்படும் சிவாய நம என்று திருவைந்தெழுத்தால் நாடுகின்றவர் மேற்கொள்ளும் தவநெறியில் நின்று நெடிது ஆற்றும் அன்பர்களின் சித்தமாகிய மனையின்கண் விளங்கும் விளக்கமாகிய சிற்பரனும் திருவொற்றியூரில் உள்ள உத்தமனுமாகிய சிவனை நெஞ்சின்கண் ஓதுக. எ.று.

     சிவநெறிக்கண் சிவம் பெற முயல்வோர் அதற்குரிய பொருளாக நாடுவது திருவைந்தெழுத் தாகலின், அதனை “நாடும் சிவாயநம என்று நாடுகின்றோர்” என உரைக்கின்றார். திருவைந்தெழுத்தால் சிவத்தை யடைய முயல்வது தவநெறியாவது பற்றி, “கூடும் தவநெறியிற் கூடி” என்றும், திருவைந்தெழுத்தின் நிலையும் பொருளும், நாடிய வழி எய்துவது பற்றி “கூடும் தவநெறி” யென்றும், தவநெறிக்கண் நெடிது நின்று சிவத்தை யெண்ணுவார்க்குச் சிவபரம் பொருள் ஞானச் சுடராய்ச் சிந்தைக்கண் தோன்றிச் சுடர்வது விளங்க, “நீடும் அன்பர் சித்தமனை தீபகமாம் சிற்பரனை” என்றும் இசைக்கின்றார். சிற்பரன் - அறிவால் உயர்ந்தவன். ஞானமேயாய முதல்வனாதல் பற்றி இவ்வாறு கூறுகின்றார்.

     இதனால், திருவைந்தெழுத்தை யோதும் தவநெறியாளர் சிந்தைக்கண் சிவம் ஞானவிளக்கமாய்த் திகழும் என்பதாம்.

     (21)