1295. ஓதுநெறி ஒன்றுளதென உள்ளமே ஓர்திஅது
தீதுநெறி சேரார் சிவநெறியில் - போதுநெறி
ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
பாதம் பிடிக்கும் பயன்.
உரை: என் மனமே, உனக்கு உரைக்கத் தகுவதொரு நெறியுளது; அதனை ஓர்ந்து கொள்க. கடல் நீர் வந்து சூழும் வயல்கள் பொருந்திய திருவொற்றியூரிலுள்ள அப்பனாகிய சிவபெருமானுடைய திருத்தொண்டர்களின் திருவடியைப் பிடிப்பதால் உண்டாகும் பயன், குற்றம் பொருந்தாத சிவநெறியிற் சென்றொழுகும் நன்னெறியாகும். எ.று.
ஓதும் நெறி - ஆசிரியர் மாணவர் என்ற வழிமுறையால் ஓதப்பட்டு வரும் நன்னெறி, அதனை யுரைக்கக் கேட்குமிடத்து நெஞ்சம் மறுக்கவும் கூடும்; கேட்டுச் சிந்தித்து நோக்குமிடத்து உயரிய ஞானப்பேற்றுக்கு வாயிலாமாதலின், “அது ஓர்தி” என உரைக்கின்றார். நன்னெறி யுள்ளும் தீது புகுந்து கெடுப்பதுண்மையின், அப்பெற்றிய தல்லாத தூயசிவத்தை யடைவிக்கும் நெறி என்பார், “தீது நெறி சேராச் சிவநெறி” என்றும், நேரிய சிவநெறி யன்றாயினும் சிவ நெறியிற் சென்றார் எய்தும் பயனை எய்துவிக்கும் நெறி எனற்கு, “சிவ நெறியிற்போது நெறி” என்றும் கூறுகின்றார். ஓதம் - கடல் நீர். முழுமதிக் காலத்தில் பெருகும் கடல்நீர்ப் பெருக்கு. பெருகும் காலத்தில் வயற்புறங்களைச் சூழ்வதும் அல்லாதபோது நீங்குவது மியல்பாதல் பற்றி, “ஓதம் பிடிக்கும் வயல்” என உரைக்கின்றார். நடக்கும் சைவாசிரியர் கால்களில் தோன்றும் வலியை மாணவர் கைகளாற் பிடித்துப் போக்குவது, சிவனடியார்க்குச் செய்யும் தொண்டு என்பர்.
இதனால், சிவனடியார் பாதம் பிடிக்கும் தொண்டு சிவநெறி மேற்கொண்டார் எய்தும் நற்பயனை எய்துவிக்கும் என்பதாம். (22)
|