1296.

     பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ
     டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார்
     உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ்
     உள்ளத் தவரை உறும்.

உரை:

      திருமாலும் பிரமனும் அறியாத சீர் படைத்த பெருமானும், நேர்மையில்லாத உள்ளத்தை யுடையவனும், உயர்ந்த திருவொற்றியூரில் உறைபவனுமாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருவுள்ளம் உடைய பெருமக்களை வந்தடையும் பயனாகிய சிவப்பேற்றை நீ அறியாமல் கீழாய பிறப்புக்களை அடைகின்றாய். எ.று.

     திருமாலும் பிரமனும் அறியாமையால் முறையே திருவடியும் திருமுடியும் காண முயன்று மாட்டாராயினமையின், “மாலோ டயன்மால் அறியாச் சீருடைய அம்மான்” என்று உரைக்கின்றார். நயன் - நீதி. சிவபெருமான் “நீதி பலவும் தன்ன வுருவா மென மிகுத்தவன், நீதியொடு தானமர்விடம்” (வைகா) என ஞானசம்பந்தர் கூறுவர். எனவே, நீதிக்குறையுள் சிவனும், சிவனுக் குறைவிடம் நீதியுமாதலின் நீதியில்லாதார் உள்ளத்தில் சிவன் மேவான் என்பதை, “நயனறியார் உள்ளத் தடையான் உயர் ஒற்றியூரவன்” என்று இயம்புகின்றார். அவன் உறையும் திருவுள்ளம் பெற்றோர் சிவப் பேரெய்தி வற்றா இன்பப் பேறெய்துவர் என்றற்கு ஒற்றியூரவன் வாழ் உள்ளத்தவரை யுறும் பயன் அறியாய்; சிவகதி என அறிக” என்றும், அறியாமையாற் கீழ்ப் பிறப்பெய்துகிறாய் எனற்குப் “பவம்சார்தி” என்றும் கூறுகின்றார். “அறியாய் பவம்சார்தி” எனவே அறிந்த வழிச் சிவம் பெறுவாய் என்பது பெற்றாம். அறிந்த வழி யெய்துவதைப் பயன்மேலும், அறியா வழிப்படுவதைக் காரியத்தின் மேலும் வைத்து வழங்குகின்றா ரென வுணர்க.

     இதனால், சிவனுறையும் திருவுள்ளத்தின் பயனும் பயனின்மையும் ஒருங்கே கூறியவாறாம்.

     (23)