1297. தவராயி னும்தேவர் தாமாயி னும்மற்
றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத
நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ்
எந்தை அடிவணங்கா ரேல்.
உரை: எனது நெஞ்சமே, விருப்பி்லாத பழியாவன நீங்கத் திருவொற்றியூரில் எழுந்தருளும் நம் தந்தையாகிய சிவன் திருவடியை வணங்காராயின், ஒருவர் தவமுடையாராயினும் தேவரேயாயினும் வேறு யாவராயினும் நமக்கு இங்கு அவரால் ஒரு பயனுமின்றாம் என்க. எ.று.
தவர் - தவம் செய்துடையவர். தேவர் - மக்களாய்ப் பிறந்து நல்வினைகளால் உயர்ந்து தெய்வப் பிறப்புற்றவர்; மக்களில் நற்பண்பு நற்செய்கைகளால் உயர்ந்தவர். கவர்வு - விருப்பு, பதித்தலும் நிந்தித்தலும் எவர்க்கும் விருப்பமில்லாதனவாதலால், “கவராத நிந்தை” என்று சொல்லுகின்றார். உள்ளக் குற்றத்தை யெடுத்தோதிப் பழித்தலும் இலது கூறி நிந்தித்தலு முண்மையின் பெரும்பான்மைத்தாகிய நிந்தையை எடுத்துரைக்கின்றார். இது நீங்க வேண்டுவோர் திருவொற்றியூரை யடைந்து சிவனை வழிபட வேண்டும் என்பர்; அது குறித்தே “நிந்தை யகன்றிட” என உரைக்கின்றார். சிவன் திருவடி வணங்காதவர் தவருள்ளும் தேவருள்ளும் ஒருவரும் இலராகவும், இருப்பரேல் அவர் உறவு கூடாதென்றற்குத் தான் “எவராயினும் நமக்கு இங்கு என்னாம்” என்று வலியுறுத்துகின்றார்.
இதன்கண், சிவனை வணங்காதார் யாவராயினும் அவர் உறவு வேண்டா என்பதாம். (24)
|