1298. ஏலக் குழலார் இடைக்கீழ்ப் படுங்கொடிய
ஞாலக் கிடங்கரினை நம்பாதே - நீல
மணிகண்டா என்றுவந்து வாழ்த்திநெஞ்சே நாளும்
பணிகண்டாய் அன்னோன் பதம்.
உரை: நெஞ்சே, ஏலமாகிய வாசனைக் கலவை யணிந்த கூந்தலையுடைய மகளிர் இடையின்கீழ்க் காணப்படுவதாயுள்ள கொடிய உலகியற் போகமாகிய அல்குலைப் பொருளாக விருப்பமுறாமல், நாடோறும், நீலமணி போலும் கண்டத்தை யுடையவனே என்று மன மகிழ்ந்து அந்தச் சிவபெருமான் திருவடியைப் பணிவாயாக. எ.று.
ஏலம் - ஏலம் முதலிய வாசனைப் பொருள் கலந்து மகளிர் கூந்தலுக்கிடும் எண்ணெய். ஞாலக் கிடங்கர் - ஞாலத்தின் மேற் செல்லும் ஆசையை மிகுவிக்கும் அல்குல். இதனைக் கிடங்கென்றும், அகழி யென்றும், பள்ளமென்றும், வடமொழியில் நிதம்பமென்றும் உபத்தமென்றும், பல படியாகக் கூறுவர். ஞாலம் ஆகுபெயராய், ஞால வாழ்வின் மேற்செல்லும் ஆசையெனக் கொள்க. மகளிர்பாற் சென்ற ஆசை யறாதவர் உலகியல் வாழ்வையே நினைந்து அதனுள் ஆழ்ந்து கிடத்தலின், அதனை ஞாலக்கிடங்கு என்று உருவகம் செய்கின்றார். கிடங்கு, கிடங்கர் என வந்தது; வண்டு, வண்டர் என வருதல் போல. தேவர் முதலியோர் உய்யும் பொருட்டு விடத்தைத் தானுண்டு அமுதத்தை அவர்கட்களித்த அருளுடைமை விளங்க நிற்றலின், “நீலமணி கண்டா” என்று நினைந்தும் சொல்லியும் பரவுவது மக்கள் இயல்பாயிற்று. நீலகண்டம் என்பதையே ஒரு மந்திரமாக வைத்து ஞானசம்பந்தர் பதியமொன்று அருளியிருப்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. நீலமணி கண்டா என்று வாழ்த்தி வணங்குக என்று வற்புறுத்தற்காகவே, “வாழ்த்தி நாளும் பணிகண்டாய் அன்னோன் பதம்” என்று பரிந்துரைக்கின்றார். அன்னான்; அவன் என்னும் சுட்டு மாத்திரையாய் நின்றது. கண்டாய்: முன்னிலையசை.
இதனால், பெண்டிர் பெண்மை யுறுப்பில் ஆசை வையாமல் நீலகண்டா என்று சிவன்பால் ஆசை வைத்து வாழ்த்தி அவன் திருவடியை நாளும் பணி என்பதாம். (25)
|