1299.

     பதந்தருவான் செல்வப் பயன்தருவான் மன்னும்
     சதந்தருவான் யாவும் தருவான் - இதம்தரும்என்
     நெஞ்சம்என்கொல் வாடுகின்றாய் நின்மலா நின்அடியே
     தஞ்சமென்றால் ஒற்றியப்பன் தான்.

உரை:

      எனக்கு, நன்மையே தருகுவதாகிய என்னுடைய நெஞ்சமே, திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் அப்பனாகிய சிவபெருமான், “நின்மலனே, எங்கட்கு உன் திருவடியே தஞ்சம்” என்று சொல்லிப் புகலடைவாயாயின், வாழ்வில் உயர்ந்த பதவியை நல்குவான்; பெருஞ் செல்வம் பெற்றார் பெறும் பயனை நல்குவான்; நிலைத்த நூறாண்டு வாழ்வு தருவான்; மேற்கொண்டு வேண்டுவன யாவும் தருவான், நீ வாடுவது எற்றுக்காக? எ.று.

     பல்பொருள் தோன்றி அறிவைக் கலக்குமிடத்து இதனைச் செய்க என நல்லது தேர்ந்து உரைக்கும் ஒண்கருவியாதலின், அதனை “இதந்தரும் என் நெஞ்சம்” என்று குறிக்கின்றார். நெஞ்சம் - அண்மை விளி. பல நினைவுகட்கு ஆளாகி அலைந்து வருந்துவது பற்றி, “என்கொல் வாடுகின்றாய்” என்று நெஞ்சினைக் கேட்கின்றார். நன்னெறி காட்டிச் செய்வது திருந்தச் செய்விக்கும் துணையாக வந்துள்ள நீ இவ்வாறு வாடுவது நன்றன்றெனப் பொருள்பட “இதந்தரு மென் நெஞ்சே” என்ற தொடர் ஒலிக்கின்றது. எளிதிற் பிணங்கி மாறுபடும் நெஞ்சின் போக்கினை மாற்றற்கு இங்ஙனம் உரைக்கின்றார். எனினுமாம். உயிர்கள் எய்தும் துன்பம் அனைத்திற்கும் அவற்றைப் பற்றி நிற்கும் மலவிருள் காரணமாதலின், துன்பம் போக்கும் தலைவன் மலரகிதனாதல் வேண்டுமென்பது கொண்டு, சிவனை, “நின்மலா” எனக் கூவித் திருவடியைத் தஞ்சம் புகுக என்பாராய், “நின்னடியே தஞ்சம் என்றால்” என்று அறிவுறுத்துகிறார். தஞ்சம் புக்க வழி எய்தும் பயன்களில் மண்ணக அரச பதமும் விண்ணக இறையவர் பதமும் அடங்கப் “பதம் தருவான்” என்கின்றார். செல்வப் பயனாகிய ஈகையும் புகழும் இனிதி னெய்தலாம் என்றற்குச் “செல்வப் பயன் தருவான்” என வுரைக்கின்றார். “செல்வத்துப் பயனே ஈதல்” என்பர் சங்கச் சான்றோர்; “உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க் கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்று திருவள்ளுவர் கூறுவர். சதம் - நூறு. ஈண்டு நூறு ஆண்டளவாய வாழ்நாள் மேலதாகும். பிற நலங்களை எஞ்சாமல் தழுவுதற்கு “யாவும் தருவான்” என இயம்புகின்றார்.

     இதனால், ஒற்றியூரப்பன் திருவடியைத் தஞ்சமென் றடைந்தால் எல்லா நலங்களும் எய்தும் என்பதாம்.

     (26)