130.

    பன்னக நொந்துறு வஞ்ச வுலகினின்று
        பரதவித் துன்னருட் கெதிர்போய்ப் பார்க்கின்றேனி
    பொன்னருளைப் புணர்ந்து மன மகிழ்ந்து வாழப்
        புண்ணியனே நாயேற்குப் பொருத்த மின்றோ
    பின்னை யொரு துணையறியேன் தனியே விட்டால்
        பெரும நினக் கழகேயோ பேதையா மென்
    தன்னை யளித்தருள் தணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, பற்கள் தோன்ற நெருக்கிப் பொறுக்கும் நோயைச் செய்யும் வஞ்ச மிக்க வுலகில் இருந்து துயரத்தால் பரதவித்து உனது திருவருட் கெதிரே சென்று பார்க்கின்றேனாயினும், நினது அழகிய அருளொரு கூடி மனமகிழ்ந்து வாழ்வதற்கு நாயனைய நான் பொருத்த மில்லாதவனோ; தெரியேன்; புண்ணியப் பொருளானவனே, நின்னையன்றி வேறுதுணை அறியேன்; என்னைத் துணையின்றித் தனித்துழல விடுவாயாயின் அது வுனக்கு அழகாகுமா? பேதையாகிய என்னை ஆதரித்தருள்க, எ. று.

     நோய் மிக்கவிடத்துப் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுப்பது மக்கள் இயல்பாகலின், “பன்னக நொந்து” என்று குறிக்கின்றார். நகுதல்-விளங்கத் தோன்றுதல். உலகியல் வாழ்வில் வஞ்சமும் சூதும் பெருகிப் பொறுக்க வொண்ணாத அளவில் வருத்த வருந்துமாறு தோன்ற, “வஞ்ச வுலகில் நின்று பரதவித்து” என்றும், திருவருள் ஒளியில் நின்றாலன்றித் தப்பி யுய்யும் வழி யில்லாமை கண்டு அதன் எதிர் சென்று நிற்க முயல்கின்றேன் என்பாராய், “உன் அருட்கெதிர் போய்ப் பார்க்கின்றேன்” என்றும் உரைக்கின்றார். திருவருளைக் கூடினால் துன்பமின்றி இன்பமாக வாழலாம் என்று நினைக்கின்றேனாயினும், அவ்வருளொடு கூடற்கேற்ற தகுதி என்பால் உளதோ என்று ஐயுறுகின்றேன் என்பார், “நின் பொன்னருளைப் புணர்ந்து மன மகிழ்ந்து வாழ நாயேற்குப் பொருத்த மின்றோ” என்று கேட்கிறார். கிடைத்தல் அருமை பற்றிப் “பொன்னருள்” எனச் சிறப்பிக்கின்றார். புண்ணிய முடையார்க்கே திருவருட் கூட்டம் பொருந்துவ தென்பது புலப்படப் “புண்ணியனே” என்கின்றார். புண்ணியப் பொருளாகிய முருகப் பெருமானை யன்றி அருள் வாழ்வு பெறுதற்குத் துணையாவார் ஒருவரும் இல்லை யென்று தெளிந்தமை தோன்றப் “பின்னை யொருதுணை யறியேன்” எனவும், அருளொடு கூட்டாது தனிக்க விடுவது அருளறமாகாது என்றற்குத் “தனியேவிட்டால் பெரும நினக்கு அழகேயோ” எனவும், துணை யின்றி அருள் வாழ்வு பெறும் அறிவில்லாதவனாகிய என்னை ஆதரித்து அருட்டுணை புரிய வேண்டும் என்பாராய்ப் “பேதையாம் என்றன்னை அளித்தருள்” எனவும் முறையிடுகின்றார்.

     இதனால் உலக வாழ்வில் எய்தும் துன்பத்தினீங்கித் திருவருள் வாழ்வு பெற்று இன்புற முயலும் எனக்கு அருட்டுணை புரிக என வள்ளலார் வேண்டிக் கொண்டவாறாம்.

     (28)