1303. சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
எந்தை யேஎனை எழுமையும் காத்த
உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
உரை: திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் உத்தமப் பொருளாகிய சிவபெருமானே, எனது அரிய வுயிர்க்கு ஒப்பற்றதோர் பெருமை சான்ற துணையாகிய எந்தையே, எழு பிறப்பும் என்னைக் காத்தருளும். உன்னால்தான் இப்போதும் மகிழ்ச்சியோ டிருக்கின்றேன். எனினும், சென்ற காலங்களில் ஒருசிறிது போதும் என் சிந்தையானது தெளிவு பெற்றதில்லை; அது போகட்டும், நிகழ்கின்ற காலத்திலாயினும் தெளிவுடன் ஒடுங்குவதே யில்லையாதலால், நெடும் பெரும் பாவியாகிய யான் இன்னமும் முறையிடுவது என்னே! எ.று.
உருவுடைய உடற்குத் துணையாவார் பலராயினும் பெருமை சிறுமைகட் குள்ளாகும் குறையுடைய ராதலால், உருவில்லாத உயிர்க்குத் துணையாய் அருட்டுணையும் அறிவுத் துணையும் வழங்கும் சிவபெருமான் ஒப்புயர்வற்ற பெருந்துணையாம் என்பார், “என்றன் ஆருயிர்க்கு ஒரு பெருந் துணையாம் எந்தை” என இயம்புகின்றார். வள்ளற் பெருமான், இன்று தாம் இனிது வாழ்தற்கு ஏது யாதெனச் சற்காரிய நெறியில் எண்ணுகின்றவர், முந்தை யெழுபிறப்பினும் இறைவனது திருவருட் காப்புத் தமக்கு இருந்தமை யுணர்கின்றாராதல் தோன்ற, “முழுமையும் காத்த உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன்” என உரைக்கின்றார். உள்ளத்தே தோன்றும் என்பது சற்காரிய வாதம். இதன் விரிவைச் சிவஞான பாடியத்துட் (சூ. 1, அதி. 2) காண்க. இப்பிறப்பில் சென்ற நாட்களிலும் தெளிவுறாது பன்னாள் கழித்துளேன் என்பார். “சென்ற நாளில் ஓர் இறைப் பொழுதேனும் எந்தை ஓர்வகை தெளிந்த தன்று” என்றும், நிகழ்காலத்தும் அந்த நிலையே நீடிக்கிற தென்பார். “நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்” என்றும் கூறுகின்றார். இறைப்பொழுது - சிறிதுபோது, ஓர் வகை - ஒரு வகையிலும்; உண்மையுணரும் வகையில் என வுரைப்பினும் அமையும்: நெடிய பாவி - பாவ நெறியில் நெடிது காலம் இருந்து வளர்ந்த பாவி. எந்தை தெளிவெய்தாமைக்கு யான் செய்த பெரும் பாவம் காரணமாகலாம்; எம்முறையில் எண்ணிப் பார்க்கினும் அதுவே புலப்படுகிறது என்பார், “நெடிய பாவியேன் நிகழ்த்துவது என்னே” என உரைக்கின்றார்.
இதனால், பாவத்தால் துன்புறவேண்டிய யான், நீ காத்தளித்துவரும் காரணத்தால் இன்பமுற இருக்கின்றே னென எடுத்தோதியவாறாம். (4)
|