1305. அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
ஆடு கின்றனன் அன்பரைப் போல
வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
உரை: ஒன்பதாகிய உருவ பேதங்களை யுடைய பெருமானே, திருவொற்றியூரில் எழுந்தருளும் உத்தமப் பொருளாகியவனே, அன்பு என்பதைக் கனவிற் கூட மனத்திற் கொள்ளாமல் அன்பே யுருவாகிய அடியார்களைப் போல நடிக்கின்றேன்; அதனோடமையாமல், நெஞ்சில் நிறைந்த வஞ்ச நினைவுகளைப் போக்கி அந்த நெஞ்சையே என் வசப்படுத்தி நிறுத்திக் கொள்ளாமல் வன்மைமிக்க பிறவித் தொடர்பை அறுத்தெறிய விழைகின்றேன்; மனத்தை வயப்படுத்தாக் குறையினால் துன்பத்தால் நிறைவுற்ற வாழ்க்கைச் சூழலில் அலமருதலால் யான் உன்னைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி நின் திருவருள் இன்பத்தைப் பெறுவேனோ, அருளுக. எ.று.
அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று என வகையால் மூன்றும் விரியால் ஒன்பதுமாகிய உருவ வகைகளை யுடைமை பற்றி, “ஒன்பதாகிய உருவுடைப் பெரியோய்” என்கின்றார். உருவம் நான்காவன; அயன், திருமால், உருத்திரன், மகேசன் என்பன. அருவம் நான்காவன; சிவம், சத்தி, நாதம், விந்து என்பனவாம். அருவுரு; சதாசிவம் என்பது. இதனை, “சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம் திகழும் ஈசன், உவந்தருள் உருத்திரன் தான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்ப் பவந்தரும் உருவநாலிங் குறுவனால் உபயம் ஒன்றா; நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பர் என்பர்” (74) என்பது சிவஞான சித்தியார். அன்பெனப் படுவது அருவப் பொருளாய், உருவாய்க் காணப்படாத தொன்றாயினும், உருவக வடிவில் காண்பதுண்டென்பது பற்றி, “அன்ப தென்பதைக் கனவிலும் காணேன்” என்றும், என்றாலும், மெய்யன்பர்கள் தோற்றத்தை அன்பின் வடிவமாகக் கொண்டு அவர்களைப் போல் நடிக்கின்றேன் என்பார், “அன்பரைப் போல் ஆடுகின்றனன்” என்றும் மொழிகின்றார். அன்பது - அது பகுதிப் பொருள் விகுதி. காண்டற் கரியவற்றையும், காணாதவற்றையும் ஓரொருகால் கனவுக் காட்சி காட்டுத லுண்மையின், “கனவினுங் காணேன்” என்கின்றார். விடாது தொடரும் பிறப்பின் வன்மையை யுணர்ந்து அதனைக் கெடுத்தல் வேண்டுமெனத் திண்ணிதாக எண்ணினேன் ஆயினும், அதற்கு நெஞ்சம் துணையில்வழி மீளாதலாகாது என உணராது, நெஞ்சினை என் வழி நிறுத்தும் மதுகை யில்லேனாயினேன் என்பார், “வன்பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்” என்கின்றார். வசப்படுத்த முயன்றேன் ஆயினும் நெஞ்சினை வஞ்ச வியல்பு மாட்டாமையை விளைவித்தது என்பார், “வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கிலேன்” எனச் சாற்றுகின்றார். இவ்வாற்றல் உலகியல் வாழ்வில் மிகப் பெரிதும் நுகரப்படுகின்ற துன்பச் சூழலிற் கிடந்து வருந்துகின்றேன் என்பார், “துன்ப வாழ்க்கையிற் சுழல்கின்றேன்” என்றும், உன்னை நாளும் தொழுது வாழ்வதுதான் இத் துன்பத்தினின்றும் உய்தி பெறுதற்கு வாயிலாம் என்பதை உணர்கின்றேன் என்பார், நின்னைத் தொழுது வாழ்த்தி நல்சுகம் பெறுவேனே” என்றும் மொழிகின்றார்.
இதனால், இன்ப வாழ்வு பெறுதற்கு வாயில் இறைவனைத் தொழுது வாழ்த்தி வழிபடுவ தென்பது விளம்பியவாறாம். (6)
|