1306. முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
முடிவு தேர்ந்திலேன் வடிவெடுத் துலகில்
என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
இந்த நாள்மட்டும் இருள்என்ப தல்லால்
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் உத்தமப் பொருளாகிய பெருமானே, முன்னைப் பிறப்புக்களிலும் காலங்களிலும் நான் செய்துள்ள வலிய இரு வினைகளும் முடிந்தொழியுங் காலம் அறியேன்; மக்களுரு வெடுத்து உலகில் தோன்றி என்னை நான் கண்டறிந்து கொண்ட நாள் முதல் இந்த நாள் வரையில் கண்டதனைத்தும் இருள் என்பதன்றிப் பிறிது யாதுமே யில்லை; இதனை யெடுத்துரைக்கவும் நாக்குக் கூசுகிறது; இனி உனது திருவருளையே நம்பி யுள்ளேனாயினும் உனது திருக்குறிப்பு இன்னதெனத் தெரிகிலேன். எ.று.
முன் என்னுஞ் சொல், காலம் இடமாகிய இரண்டையும் நோக்கி நிற்பதாகலின், பிறப்பும் காலமும் வருவிக்கப் பட்டன. இரண்டும் இடையறாது செய்யப்பட்டவை யாதலின், “நான் செய்த வல்வினை” என்றும், அவை நல்லவும் தீயவும் என இரண்டாதலின், “இரண்டின்” என்றும், பயன் நுகருமளவும், செய்தானை விடாது தொடரும் வன்மையுடைமை பற்றி, “வல்வினை” என்றும், வினைத் தொடர்பினின்று அறவே நீங்குங் காலம் தெரியப் படாமையின் “முடிவு தேர்ந்திலன்” என்றும் மொழிகின்றார். பிறந்து வளர்ந்து அறிவ தறியுங் காறும், மக்கள் தம்மை அறிவ தின்மையின், “வடிவெடுத் துலகில் என்னை நான் கண்ட தந்த நாள் தொடங்கி” என்றும், பொருள் நிகழ்ச்சிகளின் காரண காரியங்களை எண்ணி யறியும் நாளை, “இந்த நாள்” என்றும், இக்கால எல்லைகளில் செய்த வினைகளின் காரண காரியங்களை ஆராயுமிடத்து, இருளாய்த் தோன்றுவ தன்றிப் பொருளாய்த் தோன்றுவ தின்மையின், “இருளென்பதல்லால் பின்னை யாதொன்றும் பெற்றிலேன்” என்றும் பேசுகின்றார். இது பற்றியே, வினையியல் கூற வந்த திருவள்ளுவர், “இருள் சேர் வினை” என்பது காண்க. இவ்வாறு இருளை முதலாகக் கொண்ட வினைகளை மேற்கொண்டு, இருளிலே முடியச் செய்கின்ற நான் அறிவொளியும் கண்ணொளியுமாகிய இரண்டும் உடையனாகியும் பெருங்குருடனாய்ப் பிறங்கி யிருப்பதைப் பேசுதற்கு நாணம் தடுத்தலின், “பேச என்னுளம் கூசுகின்றது காண்” எனக் குறிக்கின்றார். கண்ணிருந்தும் குருடு பட்டுழலும் நான், என்னை நம்புதற் கிடமின்மையின், “உன்னை நம்பினேன்” என்றும், எனது அறியாமைக்கு இரங்கி அருளுதற்குரிய நினது திருவுள்ளம் அறியேன் என்பார், “நின் குறிப்புணரேன்” என்றும் மொழிகின்றார்.
இதனால், காரண மறியாது வினை செய்து உழல்கின்ற தனது நிலையை யெடுத்தோதி வருந்தியவாறாம். (7)
|