1307.

     கண்ணி லான்சுடர் காணிய விழைந்த
          கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத்
     தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
          சித்தம் எப்படித் தெரிந்திலன் எளியேன்
     பண்ணி லாவிய பாடலந் தொடைநின்
          பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்
     உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே
          ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

உரை:

      திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் உத்தமப் பொருளாகிய பெருமானே, பண்ணிசைக் கமைந்த பாமாலை தொடுத்து நின் திருவடித் தாமரைக் கமையப் புனைகின்ற சான்றோர் திருவுள்ளத்தில் நிறைந்த இன்ப வெள்ளமே, கட்பார்வை யல்லாத குருடன், ஞாயிற்றின் சுடரொளி காண விரும்பிய விருப்பத்தையொத்த என் வேட்கையை நிறைவித்தற்குத் தெளிந்த ஒளியுடைய பிறைத் திங்களைச் சடையிலே முடித்த சிவபரம் பொருளாகிய நினது திருவுள்ளம் யாது நினைக்கின்றதோ எளியனாகிய யான் தெரியேன். எ.று.

     பண்ணமைந்த பாடல்களை விரும்பிக் கேட்பதோடு, பாடுவோர்க்கு மண்ணகத்தும் விண்ணகத்தும் பெருவாழ்வு தருபவனெனப் பெரியோர்கள் பாராட்டுதலின், “பண்ணிலாவிய பாடலந் தொடை நின் பாதபங்கயம் பதிவுறப் புனைவோர் உண்ணிலாவுவர்” என்று உரைக்கின்றார். “பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்” (கடம்பந்) என நாவுக்கரசரும், “பண்ணனென்ற இசை பாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்” (புள்ளி) என ஞானசம்பந்தரும் பிறரும் உரைப்பன ஈண்டு நினைவுகூரற் பாலன. பண்ணிசைக்குப் பொருந்திய பாடல்களைப் “பண்ணிலாவிய பாடல்” என்று சிறப்பிக்கின்றார். “பண் சுமந்த பாடல்” என்பர் மணிவாசகர். பாடலந் தொடை - பாமாலை. இனிய செஞ்சொற் பாட்டுக்களால் இறைவன் திருவடியைப் புகழ்ந்து பாடி யணியும் பெருமக்களைப் “பாடலந் தொடையால் பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்” என்று புகழ்கின்றார். பாடும்போது மனமும் மொழியும் (கையான) மெய்யும் ஆகிய முக்கரணங்களும் பணி புரிதலால், உள்ளத்தே இன்பம் சுரந்து பெருகுதலின், “புனைவோர் உள் நிலாவிய ஆனந்தப் பெருக்கே” என்று சிறப்பிக்கின்றார். இதனை யுணர்ந்தே, ஞானசம்பந்தப் பெருமான், “பாடுவாருக் கருளும் எந்தை” (முதுகுன்) என்று பரிந்துரைக்கின்றார். உண்மை ஞானமில்லாத யான் உனது திருவருட் பெருநலத்தைக் கண்டடைய விரும்புவது எளிதின் இயலாததோர் அருஞ் செயல் என்றற்கு, “கண்ணிலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்து” என மொழிகின்றார். கண்ணிலான் - குருடன். சுடர் - ஞாயிற் றொளி. தனக்குத் திருவருள் ஞானம் வழங்க வேண்டு மென்பார், “தெண்ணிலா முடிச் சிவபரம் பொருள் நின் சித்தம் எப்படி” என்றும், அந்த ஞானம் பெறுதற்குரிய தகுதிப் பாட்டின் உண்மை யின்மையைச் சிவனை யல்லது பிறர் அறியாராகலின், “எளியேன் தெரிந்திலேன்” என்றும் செப்புகின்றார். திருமுடியில் விளங்கும் பிறைத் திங்கள் களங்கக் கலப்பில்ல தாதலின், “தெண்ணிலா” என்று சிறப்பிக்கின்றார். களங்கக் கலப்பில்லாத பிறைத்திங்களை முடியிற் கொண்டவனாதலின், மலக் கலப்புடைய தமது அறிவிற்கு அருள் ஒளி நல்குவனே என ஐயுறும் தமது கருத்தை இதனாற் குறிப்பாய்ப் புலப்படுத்துவார், “சித்தம் எப்படி” என வினவுகின்றார் என உணர்க.      இதனால், சிவஞானம் வேண்டி முறையிட்டவாறாம்.

     (8)