1308. உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்
உண்மை அன்றென உணர்த்தியும் எனது
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்
பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்
வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ
வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ
ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
உரை: ஒள்ளிய அம்பலத்தில் அருளொளி திகழும் பரம்பொருளே, திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் பெருமானே, உண்மைப் பொருளாவது நினது திருவருள் நல்கும் சுகம்; மற்ற சுகமெனப்படுவன வெல்லாம் நிலையின்றிப் பொய்ப் படுவன என அறிவுறுத்தியும் என்னுடைய பேதுறுகிற நெஞ்சம் புன்மை யுற்று என்னைச் செலுத்திய வண்ணமிருக்கிறது. வளமை சிறிது மில்லாத குறையால் எளிமை யுற்று வருந்துகிறேன்; இதனால், யான் திருவருட் சுகவாழ்வு பெறுவேனோ? எ.று.
ஒண்மை - ஒளியுடைமை. திருவம்பலத்தின்கண் எழுந்தருளிச் சிவஞானப் பேரொளி செய்வது விளங்க, “ஒளி செயும் சுடரே” எனச் சிவபரம் பொருளைத் தெரிவித்தருள்கின்றார். உண்மைப் பொருள் - என்றும் உள்ளதாகிய நித்தப் பொருள். சிவத்தின் திருவருட் போகத்தாற் பெறலாகும் இன்பமே நிலையாயது; பிறவற்றால் எய்தும் இன்பமாவன யாவும் பொய்யாம் என உணர்த்தினமை விளங்க, “உண்மை நின்னருட் சுகம், பிறவெல்லாம் உண்மையன்று என உணர்த்தியும்” என உரைக்கின்றார். நில்லாது பெயர்ந்து ஓடும் நெஞ்சென்றற்குப் “பெண்மை நெஞ்சம்” என வுரைக்கின்றார். “பெண்ணெனப் படுவகேண்மோ பீடில பிறப்பு மாதோ, உள்நிறை யுடைய வல்ல ஒராயிரம் மனத்தவமாகும்” (சீவக. 1597) என்பர் திருத்தக்க தேவர். வெண்மை - புல்லிய அறிவு; சிற்றறிவுமாம். உலகப் பொருள்கள் நல்கும் சிற்றின்பத்திலே தோய்கின்றது என்றற்கு, “உலகப் பித்திலே இன்னும் தொத்துகின்றது” என்று சொல்லுகின்றார். வளமை, வண்மையென வந்தது. அறிவினால் திண்மை யின்மை புலப்படுத்தற்கு “வண்மை யொன்றிலேன்” எனவும், மெலிவுடைமை விளக்குதற்கு “எண்மையின் அந்தோ வருந்துகின்றனன்” எனவும் இசைக்கின்றார். இத்தகைய எனக்குச் சிவஞான வாழ்வு எய்துவ தரிதென்று தோன்றுகிற தென்பார், “வாழ்வடைவேனோ” என்று சொல்லி அவலிக்கின்றார்.
இதனால், மனத்தின் திண்மையின்மை கூறிச் சிவபோக வாழ்வு எய்துமோ வென வருந்தியவாறாம். (9)
|