1309. நையு மாறெனைக் காமமா திகள்தாம்
நணுகி வஞ்சகம் நாட்டுகின் றுதநான்
செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
திகைக்கின் றேன்அருள் திறம்பெறு வேனே
வையு மாறிலா வண்கையர் உளத்தின்
மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
உய்யு மாறருள் அம்பலத் தமுதே
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
உரை: அம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் அமுதமே, ஒற்றியூரின்கட் கோயில் கொண்டருளும் உத்தமப்பொருளே, குறை கூறுதற்கிடமின்றி வளமாக உதவும் கையுமுடைய பெருமக்கள் மனத்தின்கண் வீற்றிருக்கின்ற மாணிக்கமலை போல்பவனே, நைந்து கெடுமாறு காமம் வெகுளி முதலிய குற்றங்கள் என்னை யடைந்து வஞ்ச நினைவு செயல்களில் என்னைச் செலுத்துகின்றன; அவற்றிற்கு எதிராய் நின்று தடுத்துக் கொள்ளும் வகை சிறிதும் என் பால் இல்லை; அதனால் மயங்கி வருந்தும் யான் நின்னுடைய திருவருளைப் பெறும் திறத்தை எய்துவேனோ, அருள் செய்க. எ.று.
அறிவு ஆண்மை பொருள் முதலியவற்றால் குறைபாடின்றிப் புகழுக்குரிய கொடையாலும் பிற நலங்களாலும் மேம்பட்ட பெருமக்களை “வையுமாறிலா வண்கையர்” என்றும் அவர்களின் தூய மனமே கோயிலாகச் சிவன் வீற்றிருக்கும் சிறப்பு விளங்க, “உள்ளத்தில் மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே” என்றும் போற்றுகின்றார். மன்னுதல் கூறுதலால், அப் பெருமக்களிடத்தில் அத் தூய குணஞ் செயல்கள் நிலைபெற நின்று நிலவுதல் பெறப்படும். மணிக்குன்றம் - மாணிக்க மலை. “மருவார் கொன்றை மதி குடி மாணிக்கத்தின் மலை போல வருவார்” (கடவூ. மயா) என நம்பியாரூரர் கூறுவது காண்க. நைதல் - மெலிதல்; குன்றிக் கெடுவதுமாம். காமாதிகள் - காமம் வெகுளி மயக்கம் என்பன. காமாதிகள் நாட்டுகின்றது என்பது, செய்யுளாகலின் பன்மையொருமை மயக்கம். பிற வருமிடங்களிலும் இதுவே உரைத்துக் கொள்க. காமம் வெகுளி முதலியன வருவது தெரியாது நெஞ்சிற்புகுந்து குற்றம் புரிவிப்பனவாதலால், “நணுகி வஞ்சகம் காட்டுகின்றது” என நவில்கின்றார். அறிவறிய வருவதாயின் முன்னறிந்து தடுத்துக் கோடலமையும்; இவை அறிவழிய வருகின்றன வென்பார், “செய்யுமாறு இதற்கு அறிந்திலன் எந்தாய்” என முறையிடுகின்றார். வந்த பின் விளையும் கேடுகளைக் காணும்போது அறிவு கலங்குவது உரைப்பார். “திகைக்கின்றேன்” என்றும், இன்ன இயல்பினால், திருவருள் நலம்பெறும் திறம் இலாதாகலின் “என் செய்வேன்” என ஏங்கி, “அருள் திறம் பெறுவேனே” என்றும் இயம்புகிறார். ஏகாரம் - எதிர்மறை. உய்யும் நெறியொன்றும் தெரிகிலேனாதலால், எல்லாம் அறியும் பேரருளாளனாகிய நீதான் அருளல் வேண்டும் என்பார், “உய்யுமாறு அருள்” என விண்ணப்பிக்கின்றார்.
இதனால், காமாதிகளால் வஞ்சிக்கப்பட்டுத் திகைத்து வருந்துவேனுக்கு அருள்நெறி வழங்குக என வேண்டிக் கொண்டவாறாம். (10)
|