8. ஆற்றாமுறை

        ஆற்றா முறையாவது செய்த தவறுகளை எண்ணி வருத்தம் மீக்கூர்தலால் ஆற்றாமை மேலிட்டு முருகப் பெருமான்பால் முறையிடுவது. ஆற்றாமை முறையீடு என்ற தொடர் இடையிலும் இறுதியிலும் சொற்கள் தொக்கு ஆற்றா முறையென வந்தது. இம்முறையீட்டின் கண் இறைவன் தன்கண் கலந்து நிற்பதறியாமை, புன்தொழில் செய்தமை முதலிய குற்றங்கள் காட்டப் படுகின்றன. வாழ்க்கை நிலையாமையைக் குறுகும் வாழ்க்கை யெனவும் செல்லும் வாழ்க்கை எனவும் பொய்யர் மனத்துள் இறைவன் புகான் எனவும் குறிப்பன சிந்தைக்கு விருந்து செய்கின்றன. அடக்க முடியாத அளவில் நிறைந்து வாயால் வெளிப்படுக்க முடியாமல் மறைந்திருக்கும் தீநினைவுகளைத் தன்கண் கொண்டிருப்பது பற்றி இப்பத்தின்கண் பாட்டுத்தோறும் மனத்தைக் கள்ள நெஞ்சென்றும், கபட நெஞ்சமென்றும், வஞ்ச நெஞ்சென்றும் பழித்துரைப்பது குறிக்கத் தக்கது.

எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

131.

    விண்ணறாது வாழ் வேந்த னாதியர்
        வேண்டி யேங்கவும் விட்டென் னெஞ்சகக்
    கண்ணறாது நீ கலந்து நிற்பதைக்
        கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
    எண்ணறாத் துயர்க் கடலுண் மூழ்கியே
        இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
    தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ்
        சாமியே திருத்தணிகை நாதனே

உரை:

     குளிர்ச்சி நீங்காத சோலைகள் சூழ்ந்த போரூரில் உள்ள முருகப் பெருமானே, திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமானே, தேவருலகில் நீக்கமின்றி வாழும் இந்திரன் முதலிய தேவர்கள் கண்டு ஏங்கி நிற்கவும், அவர் கூட்டத்தை விட்டுப் போந்து எளியேனுடைய நெஞ்சின்கண் எழுந்தருளி என்னுட் கலந்து நிற்பதைக் கள்ளத்தன்மை பொருந்தியவனாதலால் யான் அதனைக் கண்டு கொள்ளேனாயினேன்; அதனால் எண்ணில்லாத துன்பக் கடலில் மூழ்கி இங்குமங்கும் திரிந்து மயங்குதலால் ஒன்றும் செய்ய மாட்டாதிருக்கின்றேன்; எனக்கு உய்தி தருக, எ. று.

     போரூர், போரி என மருவி வழங்குகிறது. கடற்கரைக்கண் இருத்தலால் கானற் சோலைகள் மிக்கிருப்பது பற்றித் “தண்ணறாப் பொழில் குலவும் போரி” என்று சிறப்பிக்கின்றார். சாமி, முருகப் பெருமானுக்குரிய பெயர்களில் ஒன்று. இது திருஞானசம்பந்தர் முதலிய சமய குரவர்கள் காலத்தேயே முருகக் கடவுட்குப் பெயராய் வழங்கிய தென அறிக. தணிகை நாதன், தணிகைமலைத் தலைவன். வேந்தன், ஈண்டு இந்திரனுக்காயிற்று. “வேந்தன் மேய தீம்புன லுலகம்” என வரும் தொல்காப்பியத்தாலும் ஈதறியப்படும். இந்திரன் முதலிய தேவர்கள் விண்ணுலகில் வாழ்தலால், “விண்ணறாது வாழ் வேந்தனாதியர்” என்கின்றார், வினை செய்தலும் பயனாகிய போக நுகர்தலு முடைய மண்ணுலகு போலாது, போக நுகர்ச்சி யொன்றே யுடையதாதலால் தேவர்கள் விண்ணுலகில் இடையறவின்றி நிலைத்து வாழ விரும்புவது தோன்ற, “விண்ணறாது வாழ் வேந்தனாதியர்” என்று விளம்புகின்றார். தங்கள் தங்கள் உள்ளத்தில் எழுந்தருளி, எண்ணும் எண்ணங்கள் நிறைவேற அருள்வான் என முருகனை வேண்டி நிற்கவும் அப்பெருமான் எனது உள்ளத்தில் அருளாற் கலந்திருப்பது அறிந்து அத்தேவர்கள் ஏங்குகின்றனர் என்பாராய், “வேந்தனாதியர் ஏங்கி நிற்கவும்” எனவும், கள்ளமே நிறைந்த நெஞ்சினை யுற்று நாயிற் கடையனாதலால், பெருமான் என் நெஞ்சின்கண் கலந்து நிற்பதை அறியேனாயினேன் என்றற்கு “நீ கலந்து நிற்பதைக் கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்” என்றும் கூறுகின்றார். காவல் புரிவதின்றிக் களவு செய்துண்ணும் நாய் நாயினத்திற் கடைப்பட்டதாகும்; அந்நாய் போற் கள்ள நினைவுகளே யுடையனாயினமையின், என்னுள் கலந்து நிற்கவும் உன்னைக் கண்டு கொள்ளும் திறமின்றி ஒழிந்தேன் என்பதாம். கள்ள நெஞ்சமும் வஞ்சக் கருத்தும் கொண்டதனால் அளப்பரிய துன்பங்களுக் குள்ளாகி அவற்றினின்றும் நீங்க வேண்டி எவ்விடத்தும் திரிந்து வாயில் பெறாது அறிவு அயர்ந்தேன் என்று உரைக்கலுற்று, “எண்ணறாத் துயர்க் கடலுள் மூழ்கி இயங்கி மாழ்குவேன்” என்று கூறுகிறார். அறிவு அயருமிடத்துச் செயலற்றுப் போவதால் “யாது செய்குவேன்” என்று உரைக்கின்றார்.

     இதனால் இறைவன் நெஞ்சினுட் கலந்திருப்பதைக் கள்ளத் தன்மை யாற்கண்டு கொள்ளாமை நினைந்து துன்புற்று ஆற்றாமை மேலிட்டு வள்ளலார் முறையிடுவது காணலாம்.

     (1)