67. கருணை பெறா திரங்கல்

பொது

    அஃதாவது இறைவன் திருவருள் தமக்கு இன்னும் எய்தவில்லையென எண்ணி வருந்துவது. 'பெறாமைக்கு இரங்கல்' எனற் பாலது, பெறாது இரங்கல் என வந்துளது.

    இதன்கண், அடியார்க் கடியனாகிய யான் குறை பல வுடையவனாயினும் பொருளாகக் கருதி யாளற் குரியவன் நீயாகலின் என்னை இவ்வுலகிலேயே கிடக்க வெனினும் அருளின்படியே கிடப்பேனெனவும், உலகமயக்கமும் தியக்கமும் என் வழிபாட்டுக்கு இடர் செய்கின்றன; என் கலக்கம் கண்டும் காணாதார் போல ஒழுகுவது நினதருட் கழகாகாதெனவும், உலகப் பொருள்களின் வன்மையும் திண்மையும் அமைதியுற விடாமல் மனம் பதைக்கச் செய்கின்றன; திருவடி தொழுவோர்க்குத் துன்ப மெய்துவது கூடாது; மனம் ஒருவழியும் நான் ஒரு வழியும் செல்வதால் இடர்கள் மலிகின்றன; என் துன்பம் கண்டும் அருளாமை சிறிதும் பொருந்தாது எனவும் எடுத்துரைத்து என்பால் பேரன்பு இல்லாமையைப் பொறுத்தருளி எள்ளற் பார்வை செய்து இரங்காமைக்கு என் செய்வேன் என வேண்டிக் கொள்ளுகிறார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1310.

     நன்றி ஒன்றிய நின்னடி யவர்க்கே
          நானும் இங்கொரு நாயடி யவன்காண்
     குன்றின் ஒன்றிய இடர்மிக உடையேன்
          குற்றம் நீக்கும்நல் குணமிலேன் எனினும்
     என்றின் ஒன்றிய சிவபரஞ் சுடரே
          இன்ப வாரியே என்னுயிர்த் துணையே
     ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே
          உனைஅ லால்எனை உடையவர் எவரே.

உரை:

      சூரியன் போல் திகழும் சிவமாகிய பரஞ்சுடரே, இன்பக் கடலே, எனது உயிர்க்குத் துணையாயவனே, ஒன்றாய் நின்றருளும் உத்தமப் பொருளே, நலமே பொருந்தியுள்ள நின்னுடைய மெய்யடியார்க்கு இவ்வுலகில் நானும் நாயிற் கடையாய அடியவனாவேன்; ஆயினும் மலைபோன்ற துன்பங்களை யுடையவனும், குற்றம் போக்கிக் கோதாட்டற் கேற்ற நற்குணம் சிறிதும் இல்லாதவனுமாவேன்; ஆயினும் உன்னையன்றித் தனக்கு ஒரு பொருளாக என்னையுடையவர் யாவர் உளர்? ஆதலால் எனக்கு அருள் செய்து ஆண்டருள்க. எ.று.

           என்று - சூரியன். “இள ஞாயிறின் சோதியன்னான்” (ஆலந்துறை) என ஞானசம்பந்தர் கூறுவதால், “என்றி னொன்றிய சிவபரஞ் சுடரே” என ஏத்துகின்றார். இன்பமே வடிவாயவ னென்பது பற்றி, “இன்ப வாரியே” என வுரைக்கின்றார். உருவிலாத உயிர்க்கு உயிராய்த் துணைபுரியும் பெருமை விளங்க, “என்னுயிர்த் துணையே” எனவும், ஒரு பரம்பொருளாய் உலகங்கட் கெல்லாம் ஒருவனாய் உயர்ந்தோங்குவது பற்றி, “ஒன்றி னொன்றிய உத்தமப் பொருளே” எனவும் இயம்புகின்றார். “ஒருவனாகி நின்றா னிவ்வுலகெல்லாம், இருவராகி நின்றார்கட்கறிகிலான்” (சித்தக்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. உயிர்கள் பயன்கொள்ளும் உலகு உடம்பு கருவி கரணம் பலவும் படைத்தளிக்கும் உடையவனாதல் பற்றி உடையவன் எனப்படுதலால், “என்னை யுடையவர் உன்னை யல்லால் இல்லை” எனக் கூறுகின்றார். இத் தொடரே இப் பத்திற்கு மகுடமாக இருப்பது குறிக்கத் தக்கது.

     இதனால், உன்னையன்றி என்னைப் பொருளாக வுடையவர் பிறர் யாரும் இல்லை என வற்புறுத்தவாறாம்.

     (1)