1311.

     தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன்
          தீய னேன்கொடுந் தீக்குண இயல்பே
     ஏது செய்தன னேனும்என் தன்னை
          ஏன்று கொள்வதெம் இறைவநின் இயல்பே
     ஈது செய்தனை என்னைவிட் டுலகில்
          இடர்கொண் டேங்கென இயம்பிடில் அடியேன்
     ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
          உனைஅ லால்எனை உடையவர் எவரே.

உரை:

      என்னுயிர்க்குத் துணையாகிய பெருமானே, எங்கட்கு இறைவனே, தீயவனாகிய யான் முன்பும் தீது செய்தேன், இப்பொழுதும் செய்கின்றேன், இனி மேலும் செய்வேன்; குணம் கொடிய எனக்கு இஃது இயல்பு. ஆகவே, எத்தகைய குற்றம் செய்தாலும் என்னை ஏற்றருள்வது நினக்கு இயல்பாதல் வேண்டும்; இக் குற்றத்தை நீ செய்தாய்; என்னைக் கைவிட்டு நீக்கி இவ்வுலகிலே கிடந்து ஏங்கி வருந்துக என உரைத்தருளுவையாயின் அடிமையாகிய யான் உனது திருவருட் பேற்றுக்குரிய செயல் யாதோ அதனைச் செய்வேன். சொல்லியருள்; உன்னையன்றி என்னைத் தனக்குப் பொருளாகக் கொண்டுடையவர் யாவர் உளர்? எ.று.

     அகனைந்திணைக்கண் காதலன்பு முறுகியவிடத்துத் தலைவி தனக்கு உற்றார்பால் அறத்தொடு நிற்றல் போல ஈண்டு பெருகிய அன்பினால் உறுவது கூறல் என்ற நிலையில் மனந் தூயதாதற் பொருட்டு தம்பாலுள்ள குற்றங்களை எடுத்துரைக்கின்றாராகலின், “தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன்” எனவும், இதற்குக் காரணம் எனது தீமைப் பண்பு என்பார், “தீயனேன் கொடுந் தீக்குண வியல்பே” எனவும் இயம்புகின்றார். தீயனேன் என்பது செயல் மேலும், தீக்குண வியல்பே என்பது பண்பின் மேலும் நிற்கின்றன. குற்றமே புரிவார் உலகத் தின்மையின், குணமும் சிறிது உளதாகலாம் எனினும், அதுவும் தீமை கருதிய தாகலாம் என்பார், “ஏது செய்தனனேனும்” எனக் கூறுகின்றார். அருளே திருவுருவாயவனாதலால் என்னை ஏற்றருள்வாய் என்பது என் துணிபென்பார், “ஏன்று கொள்வது என் இறைவ நின் இயல்பு” என உரைக்கின்றார். இனி அதனில் வேறுபட்டு என் செயல்களைக் காண்டலால் உளதாய வெறுப்பால் இன்னோரன்ன தீமைகளைச் செய்தாயாதலால் நீ இவ்வுலகிலேயே இருந்து இன்புறுக எனப் பணிப்பாயேல், யான் வேறே செய்தற்கோ உரைப்பதற்கோ ஒன்றுமில்லை என்பாராய், “ஈது செய்தனை யென்று என்னை விட்டு இவ்வுலகில் இடர் கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் செய்வதொன்று ஓது” எனக் கேட்டுக் கொள்கின்றார்.

     இதனாற் செய்த தீமைக்காக இவ்வுலகிலே இருந்தொழிக என்றால் யான் வேறு செய்தற்கில்லேன் எனத் தெரிவித்துக் கொண்டவாறாம்.

     (2)