1312. சென்ற நாளினும் செல்கின்ற நாளில்
சிறிய னேன்மிகத் தியங்குறு கின்றேன்
மன்ற நான்இவண் இவ்வகை ஆனால்
வள்ள லேநினை வழுத்துமா றெதுவோ
என்ற னால்இனி ஆவதொன் றிலைஉன்
எண்ணம் எப்படி அப்படி இசைக
உன்ற னால்களித் துவகைகொள் கின்றேன்
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
உரை: கழிந்த நாட்களை நோக்க இப்போது கழிகின்ற நாட்களில் சிறுமையுடையனாதலால் மிகவும் மயங்குகின்றேன்; நான் இவ்வண்ணம் தியங்கி மயங்குவதால் வள்ளலாகிய உன்னை நான் வாழ்த்தி வணங்குவது எத்துணை இடர்ப்படுகிறது, காண்; இது குறித்து என்னால் ஒன்றும் ஆவதாகத் தோன்றவில்லை; உனது திருவுள்ளம் எப்படியோ அப்படியே யாவும் நடக்கட்டும்; உனது திருவருளால் நான் இன்ப முடனிருக்கிறேன். அஃது உண்மை. உன்னை யொழிய என்னைப் பொருளாக மதித்து உடையராகுவோர் வேறே யாவருளர்; எவருமில்லை. எ.று.
கழிந்த நாட்கள் கழித்த வகை மறந் தொழிந்தபடியால் ஒரு கலக்கமும் நெஞ்சில் இல்லையெனினும் கழிகின்ற நாள் ஒவ்வொன்றினும் கவலையும் கையறவும் தோன்றிக் கலக்குவதால் அறிவு மயங்குகின்றேன் என்பார், “சென்ற நாளினும் செல்கின்ற நாளில் மிகத் தியங்குறுகின்றேன்” எனவும், எனது சிறுமை ஒவ்வொரு கணமும் தோன்றி மலைவிக்கின்றது என்றற்குச் “சிறியனேன்” எனவும் இயம்புகின்றார். மன்ற - தெளிவு காட்டும் இடைச்சொல். இவ்வாறு தியக்கம் ஒருபாலும் சிறுமை யொருபாலும் நின்று இடர்ப்படுத்த, உன்னை வழிபடற்குரிய அன்பின் பெருமையும், வழிபாட்டின் அருமையும் மனத்திற் காட்சி தந்து மனத்தை அழுங்குவிக்கின்றன என்பாராய், “நான் இவண் இவ்வகையானால் வள்ளலே யுனை வருத்துமா றெதுவோ” என உரைக்கின்றார். வழிபாட்டில் அழுங்குதல், செலவிடை யழுங்கல் போல, வழிபடாமையன்று; சுணங்குவித்தல்; எவ்வாற்றாலும் வழிபடுவது கடன் எனவுணர்க. “பரமேட்டி பாதம் காலையும் மாலையும் போய்ப் பணிதல் கருமமே” (ஆரூர்) என ஞானசம்பந்தரும், “காலையிலும் மாலையிலும் கடவுள் அடிபணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர்” என நம்பியாரூரரும் கூறுவன காண்க. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அருளுரைப்படி யான் செய்வன செய்த லொழிய வேறு எனக்கெனச் செயல் வேறில்லை; நின் திருவுள்ளப்படியே யாவும் நடக்கட்டும் எனத் தன் பணிநீத்தலைச் செய்கின்றாராதலால், “என்றனாலினி யாவதொன்றிலை உன்னெண்ணம் எப்படி அப்படி இசைக” என மொழிகின்றார். இதனை ஆன்ம சுத்தி யென்பர் உமாபதி சிவனார் (சிவப். 71). “மன்னருள் தன்னில் மன்னுதல்” என்பர் மதுரைச் சிவப்பிரகாசர் முதலியோர். தன் பணி யென்பதின்றி யாவும் திருவருள் செய்பணி என இருப்பார்க்கு எய்துவது திருவருளின்ப மாதலால் “உன்றனாற் களித்துவகை கொள்கின்றேன்” என ஓதுகின்றார். மெய்கண்ட நூல்கள் இதனை ஆன்ம லாபம் எனக் குறிக்கும். இது நோக்கியே வள்ளற்பெருமான் மெய்கண்டாரை, “விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன்” (2533) என்று பரவுகின்றார்.
இதனால், வழிபாடு சுணங்குதற்கு வருந்துதல் தெரிவித்தவாறாம். (3)
|