1313.

     மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
          வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
     ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
          அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
     செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
          தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
     உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
          உனைஅ லால்எனை உடையவர் எவரே.

உரை:

      மயக்கம் பொருந்திய வாழ்க்கையில் நாள்தோறும் வருத்தம் மிகுத்து அறிவு கலக்கமுறுவதெல்லாம் கண்களாற் கண்டும் காணாதவர்போல் உறைப்புடன் இருந்தொழிவது உனது திருவருட்கு அழகாகாதே; ஐயோ, இதற்குமேல் யான் ஒன்றும் செய்வதறியேன்; தில்லைத் திருவம்பலத்தில் தென்றிசையை நோக்கி நின்று உலகுயிரனைத்தும் உய்யுமாறு ஆடியருளும் திருவடியை நம்பி இருக்கின்றேன்! உன்னை யொழிய என்னை ஒரு பொருளாக மதித்து உடையவராவார் வேறு யாருமில்லை. எ.று.

     மாயா காரிய வாழ்க்கையாதலாலும், பித்த வாத சிலேத்துமங்களாலாகிய உடலோடு கூடி வாழ்க்கையை நடத்துவதாலும் மயக்கம் இயல்பாக உள்ளமைபற்றி “மையல் வாழ்க்கையில் நாள்தொறும் வருந்தி” எனவும், மனம் மொழி உடல் ஆகிய மூன்றும் இடையறவின்றி இயங்க வேண்டியிருப்பதாலும், கணந்தோறும் மாறும் முக்குண இயக்கத்தாலும் நெஞ்சம் கலக்கமுறுவதால், “அடியேன் நெஞ்சக மாழ்குவதெல்லாம்” எனவும் இயம்புகிறார். இந்நிகழ்ச்சிகள் அத்தனையும் இறைவன் அறிய நிகழ்வதால் தமக்குத் தெளிவு நல்காமல் இருப்பது முறையாகாது எனத் தெரிவிப்பாராய், “ஐயா! கண்டிடாதவர்போல் அடம் பிடிப்பது உன் அருளினுக்கு அழகோ” என முறையிடுகின்றார். அடம்பிடிப்பது - பிடிவாதம் செய்வது. அறிவு செயல்கள் கலக்கமுற்று வருந்துவாரைக் கண்டவிடத்து ஒழிவது பேரருளாளர்க்கு அறமாகாது என்பார் “அருளினுக்கு அழகோ” என்கிறார். அருளியக்கமின்றேல் உயிர்க்கு அறிவியக்கம் இல்லையாதலால், “மேல் ஒன்றும் செய்ய அறிந்திலன்” எனவும், அதுகுறித்து சிவபெருமான் திருவடித் துணையையே நோக்கி இருப்பது புலப்பட, “சிவனே தில்லை மன்றிடைத் தென்முகம் நோக்கி உய்ய வைத்த தாள் நம்பி நிற்கின்றேன்” எனவும், இசைக்கின்றார். தில்லையிலுள்ள பொன் மன்றில் தென் திசையை நோக்கித் திருவடியைத் தூக்கி ஆடுகின்ற திருக்கோலம் இனிது தோன்றத் “தில்லை மன்றிடைத் தென்முகம் நோக்கி உய்ய வைத்த தாள்” என உவந்துரைக்கின்றார். உயிர்கள் உய்வு பெறுவதற்கென அமைந்தவையாதலின், இறைவன் திருவடிகள் “உய்ய வைத்த தாள்” எனப்படுகின்றன.

     இதனால், வையக வாழ்வு விளைவிக்கும் மையலால் உண்டாகும் மன மயக்கத்தைத் தீர்த்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டவாறாம்.

     (4)