1314. மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால்
வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம்
எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற்
றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன்
அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால்
அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன்
உண்ண நல்அமு தனையஎம் பெருமான்
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
உரை: மண்ணுலகில் நடத்துகின்ற சிறுமை வாழ்வின் பொருட்டு வருந்துகின்றபோது எதிர்ப்படும் பொருள்களின் வன்மையும் திண்மையும் பன்முறையும் எண்ணிப் பார்க்கையில் நெஞ்சம் பதைத்து ஏங்கி இளைத்தொழிகின்றது; அண்ணலாகிய நின் திருவருள் துணையிருக்கு மாயின் அமைதியுடன் வாழ்வேன்; திருவருளைத் துணையாகப் பெறும் திறந்தான் தெரிகிலேன்; உண்டற்கமைந்த நல்ல அமுது போன்ற பெருமானே, உன்னையன்றி யென்னை ஒரு பொருளாக எண்ணியுரிமையுடன் உடையராகுபவர் யாவர்? எ.று.
மண்ணக வாழ்வு நல்கும் இன்பம் சிலவாழ்நாள் பல்பிணியாற் சிறுமையுடையதாதல்பற்றி, “சிறுமை வாழ்வு” எனப்படுகிறது. சிறுமை யுடைத்தாயினும் முயற்சிபெரிதும் வேண்டப்படுவதென்றற்கு “வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி” என்றும், வாழ்வில் எதிர்ப்படுவன பலவும் வன்மையும் திண்மையுற்று வாழ்வார் மனத்தைத் துன்பத்தால் வருத்துவது விளங்க, “வன்மைகளெல்லாம் எண்ண எண்ண நெஞ்சகம் பதைப்புற்று” என்றும், நினைவு மிகுதியால் நின்ற வுடம்பை மெலிவித்து விரைந்து இறப்புக் கிரையாக்குதல் தோன்ற “ஏங்கி ஏங்கி நான் இளைப்புறுகின்றேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். அண்ணல், அண்மை விளியாய்ச் சிவபெருமானைக் குறிக்கிறது. மனத்திற் றுடிப்பும் மெய்யில் இளைப்புமின்றி இனிது வாழ்தல் வேண்டில், திருவருளின் துணையின்றியமையாமை கூறுவாராய், “நின் திருவருள் துணையடைந்தால் அமைந்து வாழ்குவன்” என்றும், திருவருட்பேற்றுக்கு ஏற்ற நெறி, நினது அருணெறி யல்லதில்லை யென்பாராய், “அடை வகையறியேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். உண்ணும் அமுதம் உண்பாரை நெடிது வாழ்விப்பதுபோல் சிவபரம் பொருள் தமது சிவ போகம் துய்ப்பாரைப் பொன்றாப் பேரின்பப் பெருவாழ் வெய்துவிப்பது குறித்தற்கு “உண்ணும் நல்லமுதனைய எம்பெருமான்” என வுரைக்கின்றார்.
இதனால், சிவத்தின் திருவருட் பெருந்துணையின் பெருமை எடுத்துப் பேசியவாறாம். (5)
|