1315. அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே
அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன்
என்னை இப்படி இடர்கொள விடுத்தால்
என்செய் கேன்இதை யாரொடு புகல்வேன்
பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப்
போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ
உன்னை எப்படி ஆயினும் மறவேன்
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
உரை: எனக்குத் தாயும், தந்தையும் நீயென்றே எண்ணி மகிழ்ந்து இன்பமுடன் இருந்தேன்; என்னை நீ இவ்வாறு துன்பமாகிய கடலில் விழச் செய்தால் யான் யாது செய்வேன்? எவரிடம் முறையிட்டுக் கொள்வேன்? பொன் போன்று அழகிய நின் திருவடிகளாகிய இரண்டு தாமரைகளையும் வணங்கிப் போற்றுபவர்க்குத் துன்பம் எய்துவிப்பது முறையாகுமா? எப்படியிருப்பினும் உன்னை நான் மறவேன்; உன்னை யல்லது என்னைப் பொருளாக மதித்து உரிமையாக உடையவராக்குவோர் யாவருளர்? எ.று.
தாய் தந்தையர் தாம் எத்துணைத் துன்பமுறினும் தம்முடைய மக்கள் துன்புறக் காணத் தரியாராக, நீ நான் துன்புற விடுத்திருக்கின்றாய் என்பார், “அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகங்குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன், என்னை இப்படி இடர்கொள விடுத்தால் என் செய்கேன்” என இயம்புகின்றார். கையில் இருப்பது சிறு கூழாயினும் தன் மகவினது உடல்நலம் பேணித் தான் பட்டினி கிடந்தாயினும் அதனை உண்பிப்பது தாயினது இயல்பு என்ற உண்மை புலப்படவே, “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றும், தான் அறிவிலும் சால்பிலும் குறைந்திருப்பினும் தன் மகன் சால்பால் உயர்ந்தவன் ஆதல் வேண்டும்; அவ்வாறின்றிக் கீழ்மையுற்றுத் துன்புறுவோனாதல் கூடாது என்ற கருத்தால், “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” (புறம்) என்றும் பொன்முடியார் கூறுகிறார். இந்த ஒள்ளிய பொருளை உள்ளத்திற் கொண்டே, வள்ளற் பெருமான், “அன்னையப்பனும் நீயென மகிழ்ந்தே அகங்குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன்” என்று இயம்புகின்றார். கடல் நீரே வெம்மையுற்றுக் கொதிக்கலுற்றால், வேறு நீரைக் கொண்டு அதனை ஆற்ற முடியாதவாறுபோல, இடர் கெடுத்தாதரிக்கும் அம்மையப்பனாகிய நீயே என்னை இடர்ப்பட விடுத்தால், உய்வகை வேறில்லையென்பார். “என்னை இப்படி இடர்கொள விடுத்தால் என் செய்கேன்; இதை யாரொடு புகல்வேன்” என ஏங்குகின்றார். இக்கருத்தே புலப்பட “ஆண்ட நீ அருளிலையானால் யாரொடு நோகேன்; யார்க்கெடுத்துரைப்பேன்; வார்கடல் உலகில் வாழ்கிலேன்” (வாழாப்) என மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. அடியவராயினார் அழிவில் பேரின்பப் பேறு குறித்தே இறைவன் திருவடியை நாளும் வணங்குவார்களாக, அதற்கு மாறாக, அவலக் கவலையும் அயரா வருத்தமும் நிறைந்த துன்ப வாழ்வு நல்குவது அப்பெருமானுடைய பேரருட்கு முரணாதல் நினைந்து வருந்துவாராய், “பொன்னை யொத்த நின் அடித்துணை மலரைப் போற்றுவார்க்கு நீ புரிகுவ திதுவோ” எனப் புகல்கின்றார். பொன் ஒத்த திருமேனியையுடைய பெருமானது திருவடிகள் வேறு நிறமுடையவை யாகாமை தோன்ற, “பொன்னை யொத்த நின் அடித்துணை மலர்” என்றும், தன்னைப் போற்றுவார்க்கு நலம் பலவும் நல்கும் பெருமை சான்றது இறைவன் சேவடியாதலின், வேண்டுவார்க்கு வேண்டாதது நல்காதென்னும் வீற்றுணர்வு உள்ளத்தே கிடந்து விம்முதலின், “போற்றுவார்க்கு நீ புரிகுவதிதுவோ” என்று புகழ்ந்துரைக்கின்றார். இந்நிலையில் ஒருவாறு மனந்தெளிந்து, அன்னையினும் தயாவுடைய பெருமான் எவ்வழியும் அருளாதொழியான் என்ற உறுதிப்பாட்டால் “எப்படியாயினும் உன்னை மறவேன்” என்றும் இசைக்கின்றார்.
இதனால், எத்துணை யிடர்ப்படினும் இறைவன் திருவருள் தமக்கு எய்தாதொழியாது என்னும் எண்ண மிகுதியைப் புலப்படுத்தியவாறாம். (6)
|