1317.

     கொடிய பாவியேன் படும்பரி தாபம்
          குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது
     நெடிய காலமும் தாழ்த்தனை நினது
          நெஞ்சம் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ
     அடியர் தந்துயர் கண்டிடில் தரியார்
          ஐயர் என்பர்என் அளவஃ திலையோ
     ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில்
          உனைஅ லால்எனை உடையவர் எவரே.

உரை:

      கொடிய பாவங்களைச் செய்து பாவியாகிய யான் எய்தி வருந்துகிற துன்பத்தை நேர்பட நன்கு கண்டும், அத்துன்பமாகிய குறையைப் போக்க நினையாமல் நீண்டகாலத்தைக் கழித்து விட்டாய்; நின்னுடைய திருவுள்ளத்திலும் வஞ்ச நினைவு ஏதேனும் புகுந்து கொண்டதோ? அடியவர்க்குத் துன்ப மொன்று உண்டாயின் அதனைச் சிவபெருமான் காணப் பொறுக்க மாட்டார் என உலகவர் கூறுவது என்னைப் பொறுத்த அளவில் மெய்ம்மையன்றோ? மிக்க துன்பங்கள் கெட்டழியுமாறு நீக்கா விடில் உன்னைத் தவிர வேறே யாவர் என்னையொரு பொருளாக மதித்து ஆதரிக்கும் பண்புடையராவர்? எ.று

.      பாவம் செய்பவர் பாவி யெனப் படுவர். தாம் செய்துளது கொடிய பாவம் எனக் கருதுகின்றாராதலால், “கொடும் பாவியேன்” எனத் தம்மையே கூறிக் கொள்ளுகின்றார். தாபம் - துன்பம்; பரியென்பது மிகுதியுணர்த்தும் இடைச் சொல்; வடமொழி வழக்கு. பரிதாபம், பரிபவம், பரிபக்குவம், பரிபாகம், பரிபுலம்புதல், பரிபூரணம் எனப் பல வடசொற்கள் தமிழில் வழங்குகின்றன; இவை மணிப் பிரவாள மென்னும் குடுகுடுப்பாண்டி யுடைநடை தோன்றியபின் தமிழிற் பெருகி உரிய தமிழ்ச் சொற்களை மறைத் தொழிந்தன. பிறரது துன்பம் கண்டவிடத்துக் காணத் தரியாமல் துடைத்தொழிப்பது அருளாளர் செயலாக இருப்ப, என் துன்பத்தைக் குறித்து உடன் கண்டும் போக்காது புறக்கணிக்கின்றாயென்பார், “பரிதாபம் குறித்துக் கண்டும் என் குறையகற்றாது நெடியகாலமும் தாழ்த்தனை” என்று கூறுகின்றார். துன்பத்துக்கு ஏது குறை யாதலால், துன்ப மென்னாமற் குறையென்கின்றார். உற்ற குறையால் நெடுங்காலமாக யான் துன்பமுறுவது கண்ணாற் கண்டிருந்தும் அதனை நீக்கினாயில்லை என்பார், “நெடிய காலமும் தாழ்த்தனை” என வுரைக்கின்றார். துன்பம் நீக்காமையும் காலம் போக்கினமையும் இனிது விளங்க, “காலமும்” என எச்ச வும்மை பெய்தார். உரிய காலத்தில் நீக்கி யிருந்தால் அடியவனாதலால் பல நல்ல தொண்டுகளைச் செய்திருப்பேன் என்பது குறிப்பு. தன்பால் வஞ்ச மில்லாமையுடன், வஞ்சமுடைய நெஞ்சின்கண் நில்லாமையு முடைய நின்பால் வஞ்சமும் புகுந்து கொண்டதோ என ஐயுறுகின்றேன் என்பாராய், “நினது நெஞ்சும் வஞ்சம் சேர்ந்த துண்டேயோ” என வினாவுகின்றார். ஐ - வியப்புமாம். யான் கூறுவதும் ஒருபால் கிடக்க, உலகத்தில் உயர்ந்த வொழுக்கத்து நன்மக்கள், உன் பெருமை கூறுமிடத்து, “அடியார் படுதுயராயின வெல்லாம் கடிதிற் களைந்து மகிழ்விப்பார்” என்று புகழ்கின்றார்களென்பார், “அடியார் தம் துயர் கண்டிடில் தறியார் ஐயர் என்பர்” எனப் புகல்கின்றார். “ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய வொட்டார்” (வாஞ்சி) என நம்பியாரூரர் நவில்வது காண்க. அவ்வுரை என்பாற் பொய்த்து விட்டதோ என்பது நற்பண்பாகாமை எண்ணி, “என்னளவு அஃது இலையோ” என இயம்புகிறார். பிறிதோரிடத்தும், “என்னளவில் நின்பால் தண்ணருள் இலையோ” (திருவருண். 2) என்பது காண்க. ஒடிதல் - ஈண்டு ஒழிதல் பொருளில் வந்தது; “ஒடியா விழவு” (அகம். 149) என்றாற்போல.

      இதனால், நெடுங் காலமாய் யான் துயர் படக் கண்டும் இரங்காமை கூடாதென முறையிட்டவாறாம்.

     (8)