1318.

     என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன்
          இறைவ நின்றனை இறைப்பொழு தேனும்
     உன்என் றால்என துரைமறுத் தெதிராய்
          உலகு மாயையில் திலகமென் றுரைக்கும்
     மின்என் றால்இடை மடவியர் மயக்கில்
          வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால்
     உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும்
          உனைஅ லால்எனை உடையவர் எவரே.

உரை:

      இறைவனே, அறிவில்லாத ஏழையாகிய யான் நாணமின்றி யெவ்வாறு சொல்வேன்; பரம்பொருளாகிய உன்னையே சிறிது பொழுதேனும் நினைப்பாயாக என்று சொன்னால், என் சொல்லைக் கேளாமல் மறுத்து மாறாயுள்ள உலக மாயா காரியங்களில் திலகம் என வுரைக்கப்படுகின்ற மின் போன்றசையும் இடையையுடைய இளமகளிர் நல்கும் வேட்கை மயக்கத்தில் என் நெஞ்சம் மூழ்கித் தெளிவை இழந்தமையால் உனது அன்பு எனப்படுவது என்பால் இல்லா தொழிந்தது போலும்; ஆனால் உன்னையன்றி என்னைப் பொருளாக மதித்து ஆதரிக்கும் அருணலம் உடையவர் வேறே யாவர் உளர்? எ.று.

     நெஞ்சின்கண் புதைந்து கிடக்கும் இழிவான எண்ணம் காம நினைவு, அதனைக் கண்ணன்ன கேளிர்க் குரைப்பதாயினும் நாணம் தடுக்கும்; பரம்பொருளாகிய சிவபெருமான்பால் உரைப்பதெனின் கூடாத செயலாதல் தோன்ற, “என்னென்று ஏழையேன் நாணம் விட்டுரைப்பேன்” என இசைக்கின்றார். நம்பியாரூரர் உரைத்ததுண்டே எனின், பேரருட் செல்வமும், தெய்வப் பெரும்புலமையும், சிவனால் தடுத்தாட் கொள்ளப்பெறும் தனிச்சிறப்பு முடையாராதலால், அவர்க்கு அஃது இனிதினியலும், யான் அறிவாலும் பிறவாற்றாலும் ஒருநலமும் இல்லாதவன் என்பார், “ஏழையேன்” எனவும், மனம் நினைத்தற்கும் நாவுரைத்தற்கும் நாணம் தடை செய்கிறதென்றற்கு, “நாணம்விட்டு என்னென்றுரைப்பேன்” எனவும் கூசி மொழிகின்றார். நெஞ்சமே, நீ சிறிது பொழுதேனும் சிவபெருமானை உள்ளத் துள்ளே நினைப்பாயாக என்று சொன்னால், அதனை யறவே மறுத்து எதிரே வேறு நினைக்கிறது என்பாராய், “இறைவ நின்றனை இறைப் பொழுதேனும் உன் என்றால் உரை மறுத்து எதிராய்” என்றும், நினைப்பது இது வென்பார், “உலக மாயையில் திலகமென்றுரைக்கும் மின்னென் றாலிடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்து விட்டது” என்றும் இயம்புகின்றார். மாயை: முதலாகு பெயராய் மாயா காரியப் பொருள்கள்மேல் நின்றது. திலகம் - உயர்ந்தது; “மழை மின் போல் சேயவர்க்கும் தோன்றியதோர் திலகமெனும் தகைத்து” (சீவக. 595) என்பது காண்க. திலக மென்னும் இச்சிறப்புச் சொல் மகளிர்க்கே யன்றி ஆடவர்க்கும், “இன்னிசைக் கூத்து நோக்கியிருந்தனன் திலக மன்னான்” (சீவக. 1170) என வழங்கும். ஆல் இடை - அசைகின்ற இடை. ஆலுதல் - அசைதல். “முழங்குதிரைப் பாவையின் ஆலும்” (நற். 378) என்றாற் போல. மடவியர் - இளமகளிர். மீள எழாவாறு மூழ்கி விட்டமை தோன்ற, “ஆழ்ந்து விட்டது” என்கின்றார். இவ்வாற்றால் உன்பால் என்னிடத்துளதாக வேண்டிய அன்பு இல்லா தொழிந்தது என்பார், “உன்னன் பென்னிடத்திலை யேனும்” என இசைக்கின்றார்.

     இதனால், எனக்கு அன்பில்லாமல் மகளிர் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டமை பொறுத்தருள்க என முறையிட்டவாறாம்.

     (9)