132. வாட்கண் ஏழையர் மயலிற் பட்டகம்
மயங்கி மாலயன் வழுத்தும் நின்திருத்
தாட்கண் நேயமற் றுலக வாழ்க்கையில்
சஞ்சரித் துழல் வஞ்சனேனிடம்
ஆட்கணே சுழல் அந்தகன் வரில்
அஞ்சு வேனலால் யாது செய்குவேன்
நாட்கணேர் மலர்ப் பொழில் கொள் போரிவாழ்
நாயகா திருத்தணிகை நாதனே.
உரை: அன்றலர்ந்த தேன் மிக்க பூக்களை யுடைய சோலை சூழ்ந்த போரூரில் வாழ்கின்ற தலைவனே, திருத்தணிகை மேவும் தலைவனே, ஒளி பொருந்திய மங்கையர் கூட்டம் பற்றிய மயக்கத்தில் தோய்ந்து திருமாலும் பிரமனும் வாழ்த்தி வணங்கும் நின்னுடைய திருவடியின்கண் அன்பின்றி அறிவிழந்து உலகியல் வாழ்க்கையில் கிடந்து திரியும் வஞ்ச நெஞ்சமுடைய என்னை நோக்கி இயமன் உயிர் கொள்ள வருங்கால் யான் என்ன செய்வேன், தெரிவித்தருள்க, எ. று.
நாட்கண்-நேர்மலர்; நாடோறும் மலர்ந்து மணம் கமழும் பூக்கள். கள் நேர் மலர் என்று கொண்டு தேன் நிறைந்த புதுப் பூ என வுரைப்பினும் அமையும். நாயகன், நாதன் என்பன தலைவனென்ற பொருளில் வழங்குவனவாகும். வாள் கண் - ஒளி பொருந்திய கண். கண்ணின் ஒளி பொருந்திய பார்வையால் ஆடவர் உள்ளத்தைக் காம வேட்கையில் ஆழ்த்தும் மகளிர் என்றற்கு “வாட்கண் ஏழையர்” என்று சிறப்பிக்கின்றார். தமது பார்வை விளைக்கும் காமக் கலக்கத்தைத் தம்மை யறியாமலே செய்தல் விளங்க மகளிர் என்னாமல் “ஏழையர்” என இயம்புகிறார். காம வுணர்ச்சியிற் கலக்குறும் போது மன மயங்கித் தெளிவிழந்தொழிதலால் மங்கையர் “மயலிற் பட்டு அகம் மயங்கி” எனவும், அந்நிலையில் அம்மகளிரிடத்தும் அவரை மகிழ்விக்கும் பொருள்களிடத்தும் ஆடவன் விருப்பம் நிறைந்து ஒன்றிப்பிற எப்பொருளையும் விருப்பின்றி ஒதுக்கி விடுமாறு புலப்பட “நின் திருத்தாட்கண் நேயமற்று” எனவும் உரைக்கின்றார். திருத்தாள் எனத் திருவடியைச் சிறப்பிக்கின்றார், திருமாலும் நான்முகனும் பணிந்து வணங்கும் திறத்தை “மாலயன் வழுத்தும்” எனக் கூறுவதன் பொருட்டு. படைத்தலும் காத்தலுமாகிய தத்துமக்குரிய தொழில்கள் முட்டின்றி நடைபெறும் ஞான நலம் வேண்டித் தேவர் இருவரும் பரவுகின்றார்கள் என்பது கருத்து. உலகியல் வாழ்க்கையில் மக்கள் கண் முதலிய அறிகருவிகளால் அறிவன அறிவதும், செயற்கருவிகளாற் செய்வன செய்வதும், அந்தக்கரணங்களால் சிந்திப்பன சிந்தித்தலும் செய்கின்றனர். கருவிகள் நோய்ப்படுவதாலும் அறிதல் முதலிய செயல்கள் தடைப்படுவதாலும், வேண்டுவன பெறப்படாமையாலும் நிலையின்றிக் குறைந்து மறைவதாலும் துன்பம் மிகுவதால் அதனைச் சான்றோர் விலக்கக் கருதுவதும் சொல்லுவதும் செய்கின்றார்கள்; எனினும் வாழ்வாங்கு வாழ்ந்தாலன்றி உய்தி பெறல் அரிதாகலின் உலகில் வாழ்ந்தே தீர வேண்டி யிருத்தலால் “உலக வாழ்க்கையில் சஞ்சரித்து” என்றும், சஞ்சரிக்கையில் உளவாகும் விருப்பு வெறுப்புக்களால் துன்பம் மிகுதலால் “சஞ்சரித் துழல் வஞ்சனேன்” என்றும் உரைக்கின்றார். வாழும் உயிர்கட்கு உரிய சாநாளைக் கணக்கிட்டு எதிர் நோக்கிய வண்ணம் கண்ணும் கருத்துமாய் இருப்பது பற்றி யமனை, “ஆட்கணே சுழல் அந்தகன்” எனவும், அவனை எதிர்த்துநின்று வெல்பவர் இல்லையாதல் பற்றி, “அந்தகன்வரின் அஞ்சுவேனலால் யாது செய்குவேன்” எனவும் இசைக்கின்றார். உலக வாழ்வில் நினைவு செயல் அனைத்தும் மகளிர் மயக்கில் ஆழ்ந்து மக்களாகிய இனத்தைப் பெருக்குவதே சிறந்து விளங்குவதால், அதனையே உலக வாழ்வாக எடுத்துரைக்கின்றார்.
இதனால், உலக வாழ்க்கையிலேயே சஞ்சரித்து உழல்வதன்றி உய்தி நாடாமை நினைந்து நமனுக்கு அஞ்சுதல் தெரிவித்தவாறாம். (2)
|