68. அர்ப்பித் திரங்கல்
பொது
அஃதாவது கருவி கரணச் செயற் பாடுகளைத் தம்முடைய அல்லவென நீத்து,
இறைவன் திருவருட் பாங்கினை யெண்ணி யிரங்குதல்.
இதன்கண், எல்லாம் திருவருள் இயக்கம் என்றும், வினையையும் மாற்ற வல்ல ஆற்றல் திருவருட்குண்டு
என்றும், அருளின் பேராற்றலும், இறைவன் அருளும் மாண்பும் கூறி, அவன் அருளாமைக் கிரங்கி, முன்பு
பாடுவார்க்கு அவன் பரிந்தருளினமையும் பகர்ந்து, சிவ தரிசனம் காட்டி யருளத் திருவுளம் பற்ற
வேண்டுமென வேண்டி, அன்பு முதிர்வால் தன் செயல் நீத்து, அடியார் பணிபுரிய வாய்ப்பருளாமைக்
கிரங்கி, திருவருட் பேற்றுக்கு நின் திருவுளப் பாங்கு வேண்டுமென நெஞ்சுருக வள்ளற் பெருமான் பாடி
யிரங்குகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1320. தம்பி ரான்தய விருக்கஇங் கெனக்கோர்
தாழ்வுண் டோஎனத் தருக்கொடும் இருந்தேன்
எம்பி ரான்நினக் கேழையேன் அளவில்
இரக்கம் ஒன்றிலை என்என்ப தின்னும்
நம்பி ரான்என நம்பிநிற் கின்றேன்
நம்பும் என்றனை வெம்பிடச் செயினும்
செம்பி ரான்அருள் அளிக்கினும் உனது
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
உரை: எல்லார்க்கும் பெருமானாகிய பிரானுடைய திருவருளிருக்கும் போது எனக்கு ஒருவகையான தாழ்வும் உண்டாகாதென்ற பெருமித வுள்ளத்தோடு இதுவரை இருந்தொழிந்தேன்; எங்கள் பெருமானாகிய உனக்கு ஏழையாகிய என்பால் இரக்கம் சிறிதுமில்லை; இதனை நான் என்னென்பேன்? இன்னமும் உன்னை நமக்குத் தலைவனெனவே நம்பி யிருக்கும் என் மனத்தை வெம்பிக் கெடச் செய்யினும், செம்மை மிக்க பெருமானாய்த் திருவருள் சுரந்தருளினும், எல்லாம் உன் திருவுள்ளப் பாங்காகுமே யன்றி யான் ஒன்றும் செய்தற்கில்லை. எ.று.
எல்லோர் தமக்கும் பிரான் என்பது “தம்பிரான்” என வந்தது. தனக்கு வேறு பிரானில்லாத தனித் தலைவன் எனினும் அமையும். தயவு - பேரருள். தயா என்பது தயவு என வந்தது. தருக்குதல் - இறுமாத்தல். உலகியல் வாழ்வில் தலைவனது தனியன்பு பெற்றான் ஒருவன் தருக்கி ஒழுகுவது போலத் திருவருள் ஞான வாழ்வில் சிவனது செல்வத் திருவருள் உண்மை யுணரும் மெய்யன்பரிடையேயும் இத்தகைய செருக்குண்டாகும் என்பது இதனால் தெரிகிறது. இதுபோலவே மணிவாசகப் பெருமானும், “தனித்துணை நீ நிற்க நான் தலையால் நடந்த வினைத்துணையேன்” (நீத்தல்) என உரைக்கின்றார். இடையறவின்றித் தாக்கும் துன்பங்களால் இறைவனது திருவருள் தனக்கு எய்தாமை கண்டு மனஞ் சோர்வுறுதலின், “எம்பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்றில்லை” என்றும், காரணம் ஒன்றும் புலப்படாமை யுணர்ந்து “என் என்பது” என்றும் உரைக்கின்றார். துன்ப மிகினும் சிவபெருமானிடத்தில் மனத்தில் அன்பு குறையாமையைத் தேர்ந்து, “நம்பிரான் என இன்னமும் நம்பி நிற்கின்றேன்” என்று புகல்கின்றார். நம்புதல் - விரும்புதல். இவ்வண்ணம் நின் திருவருட்டுணையையே நம்பியிருக்கும் என்மனத்தை ஏமாந்து வாடவிடினும் என்பார், “நம்பும் என்றனை வெம்பிடச் செயினும்” எனவும், செம்மை குன்றாத பெருமானாதலின், அதற்கேற்ப நின் திருவருளைப் பெருக வழங்கி என் உயிர் தரிப்பச் செய்யினும் என்பார், “செம்பிரான் அருள் அளிக்கினும்” எனவும், இவ்விரண்டாலும் உன்னை என் உள்ளம் காய்தலோ உவத்தலோ செய்யாது எல்லாம் உன் திருவருளின் இயக்க மென அதன் பொறுப்பில் விடுத்துக் கையொழிவ தல்லது வேறு செயல் வல்லேனல்லேன் என்பார், “உனது சித்தம் அன்றி யான் செய்வ தொன்றிலையே” என்றும் செப்புகின்றார்.
இதனால், எல்லாம் திருவருள் இயக்கம் எனத் “தன் பணி நீத்தல்” தெரிவித்தவாறாம். (1)
|