1321.

     துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
          சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
     இட்ட நல்வழி அல்வழி எனவே
          எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
     விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
          வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
     சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
          சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.

உரை:

      செந்நெறிச் செல்வர் சிந்தையில் உறையும் சிவபெருமானே, துட்டத் தன்மையும் வஞ்ச நினைவும் கொண்ட நெஞ்சினையுடைய கொடியவனாகிய யான் சொல்வதற் கென்ன உளது? நல்வழி, அல்வழி என விளங்கும் வழிகள் இரண்டினுள் எனது பழைய வினைவயத்தால் எனக்கிட்ட வழி யாதோ, அவ்வழியை விட்டகன்று வேறு வழியை என்னால் மேற்கொண்டு செல்ல முடியாதன்றோ? எல்லாம் நின் திருவுள்ளப் பாங்கின்படி ஆகுவதன்றி யான் ஒன்றும் செய்தற்கில்லை. எ.று.

     துட்டத் தன்மையும் வஞ்ச நினைவுகளும் உள்ளத்தே கொண்டு சொற் செயல்களில் தோன்றாவாறு செய்தொழுகும் நேர்மை யின்மை பற்றி, “துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்” என வள்ளற் பெருமான் தம்மை யிழித்தும் பழித்தும் பேசுகின்றார். தீச் செயல்கள் எல்லாம் இவற்றுள் அடங்கி விடுதலின், “சொல்வ தென்னை” என உரைக்கின்றார். முன்னைச் செய்வினை காரணமாக நுகர்தற்குரிய பயன்களை நுகருந்திறம், முன்னமே வகுக்கப்படுதலின், அத் திறங்கள் தொல்வினை வசத்தால் இட்ட நல்வழி, அல்வழி என எண்ணப் படுகின்றன. செய்வினைப் பயனை செய்வான் நுகரும்படி செய்பவன் சிவபரம் பொருளாதலின், “இவ்வழி இரண்டிடை எனைநீ விட்ட தெவ்வழி” எனவும், அவ்வழியினின்றும் நீங்கி வேறு நெறி பற்றுதற்குரிய அறிவாற்றல் தமக்கில்லை யென்பார், “அவ்வழி யகன்றே வேறும் ஓர் வழி மேவிடப் படுமோ” எனவும் விளம்புகின்றார். தூய சிவஞானிகள் உள்ளத்தில் எப்பொழுதும் கோயில் கொண்டிருப்பவன் என்ற உண்மை பற்றிச் “சிட்ட ருள்ளுறும் சிவபெருமான்” என்றும், அவனது திருவருள் இவ்வழிகளை மாற்றவும், உய்வழி காட்டி உறுதி பெறவும் செய்ய வல்லது என்பார், “நின் சித்தம் அன்றி யான் செய்வ தொன்றில்லை” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், வினை காட்டும் நெறிகளை மாற்றவல்ல ஆற்றல் திருவருளுக்குண்டென்பது தெரிவித்தவாறாம்.

     (2)