1323.

     கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல்
          கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன்
     எண்ணி லாஇடை யூறடுத் ததனால்
          இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென்
     உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய்
          உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண்
     தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
          சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.

உரை:

      தெள்ளிய நிலவு பொழியும் பிறைச் சந்திரனை முடிச்சடையில் அணிந்தருளும் சிவபரம் பொருளே, கண் பார்வை யில்லாதவன் கதிர் விளங்குஞ் சூரியனைக் காண விழைவது போலக் கருணைப் பேற்றுக்குரிய அருட் கருத்தில்லாத யான், உனது கருணை யொளியைப் பெற விரும்புகின்றேன்; எனக்குள் நிலவும் உயிர்க்குயிராய் விளங்கும் பெருமானே, உனக்கு நிகராக முன்னோர் ஒருவருமில்லையன்றோ? உன் திருவுள்ளப்படியே யாவும் நடக்குமே யன்றி யான் செய்யலாவது ஒன்றுமில்லை காண். எ.று.

     முழு மதியில் தோன்றும் களங்கம் சிறிதுமில்லாமல் தெளிந்த ஒளி திகழ்வதுபற்றிப் பிறைத் திங்களைத் “தெண்ணிலா” எனவும், அதனை முடியில் அணிந்திருப்பது கொண்டு, “நிலா முடிச் சிவபரம் பொருளே” எனவும் இசைக்கின்றார். கண்ணிற் பார்வை யில்லாதவன் மிக்க ஒளி பரப்பி விளங்கும் சூரியனைக் காண்டற்குக் கருத்தில் ஆர்வம் மிகுவது போலத் திருவருட் பேற்றுக்குரிய தகுதிப்பாடில்லாத யான் நினது அருட்காட்சியைப் பெற விழைகின்றேன்; என் விழைவுக்கு இடையூறாக எத்தனையோ இடர்கள் தோன்றி வருத்துவதால் உள்ளம் சோர்வெய்துகின்றேன் என்பார், “எண்ணிலா இடையூறு அடுத்தனால் இளைக்கின்றே” னென வுரைக்கின்றார். எளியனாகிய என்னை ஏற்றருளி ஊக்கியின்புறுத்தற்குரிய நிலையில் எனது உடலில் நிலவும் உயிர்க்குயிராய் உணர்வு கொளுத்தி யுணர்த்தும் பெரிய ஞானச் செயலுடையவராய் ஆதரவு செய்பவர், உனக்கு நிகராக ஒருவருமில்லை யென்பார், “என் உண்ணிலாவிய உயிர்க் குயிரனையாய் உன்னை யொத்ததோர் முன்னவர் இலைகாண்” என மொழிகின்றார். இறைவன் உடற்குள் இருந்து இடர் கொடுத்தருளும் நலத்தை ஞானசம்பந்தர், “உடல் வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த இடர் தொடரா” (கலிக்கா) எனக் கூறுவது காண்க. ஒத்ததாகிய முன்மை யுடையவர் என்பார், “ஒத்ததோர் முன்னவர்” என வுரைக்கின்றார். “முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருள்” என்பது திருவாசகம், அருளின் இயல்பும், அதனை அருளும் மாண்பும் அறிவரியவை யாதலால் “நின் சித்த மின்றி யான் செய்வ தொன்றிலை” எனத் தெரிவிக்கின்றார். “ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா” (பாசுரம்) என்று ஞானசம்பந்தர் இயம்புவதறிக.

     இதனால், இறைவன் அருளும் மாண்பு கூறியவாறாம்.

     (4)