1324. மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம்
விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான்
நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன்
நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ
இச்சை நன்றறி வாய்அருள் செய்யா
திருக்கின் றாய்உனக் கியான்செய்த தென்னே
செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின்
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
உரை: செச்சை மலர் போற் சிவந்த திருமேனியை யுடைய பெருமானே, நல்லனவே எடுத்தோதிப் பிறரைப் பாராட்டிப் பேசுகின்றவர்கள் தமக்கு வேண்டுவனவற்றைக் கண்மூடித் திறக்கும் முன் தம்பால் எய்தக் காண்பதால், யானும் உனை மெச்சித் திருவடியின்பத்தைப் பெற விரும்புகின்றேன்; விரும்பிய போதும் கொடியவனாகி யான் நலம் பெறவோ, வலம் பெறவோ விரும்புவது யாதனையும் நீ நன்கறிவாயாயினும் திருவருள் செய்யா தொழிகின்றாய்; உனக்கு யான் செய்த குற்றம் யாதோ? யாவும் உன் திருவுளப் பாங்கின்படி யாகுமே யன்றி யான் செய்வதென யாதும் இல்லை, காண். எ.று.
செச்சை - வெட்சிப் பூ. இது சிவந்த நிறமுடையதாகலின், செம்மேனிப் பெருமானாகிய சிவனை, “செச்சை மேனியாய்” என்று பரவுகின்றார். “செச்சை மா மலர் புரையும் மேனி யெங்கள் சிவபெருமான்” (சதக) என மணிவாசகப்பெருமான் உரைப்பது காண்க. சிவபெருமான் திருமேனி ஒளிப்பொருள்கள் யாவற்றிற்கும் மேலாய ஞானவொளி திகழ்வது விளங்கச் “சிவபரஞ்சுடர்” என்று சிறப்பிக்கின்றார். பிறருடைய குணநலங்களையும் செயல்களையும் பாராட்டியுரைப்பது மெச்சுதல் எனப்படும். பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவார் மேற் கொள்ளும் நன்னெறியும் அதுவாகும்; அதனால் மெச்சுகின்றவர் விழையும் நலம் பலவும் இனிதின் வந்தெய்தும்; கொடுமை செய்பவரும் தடை செய்யார் என்று உலகியலறிவு தெளியக் காட்டுவதுபற்றி, “மெச்சுகின்றவர் வேண்டியவெல்லாம் விழியிமைக்கு முன் மேவல் கண்டு” என்று விளம்புகிறார். விரைந்தெய்வது விளங்க, “விழியிமைக்குமுன்” எனக் குறிக்கின்றார். மேவல்: ஈண்டு எய்துதல் மேற்று. நச்சுதல் - விரும்புதல். ஒருவர்பால் விருப்புண்டாயின், அவருடைய குணம் செயற் பெருமையே புலனாகி எடுத்தோதப் பெறுமாதலின், தானும் அவ்வாறு விருப்பு மிகுந்து சிவபிரான் பெருநலங்களையே பெரிது புகழ்ந்து உரையாலும் பாட்டாலும் ஓதியது விளங்க “உனை நான் நச்சுகின்றனன்” என வுரைக்கின்றார். நச்சினும் கொடியேன் - நஞ்சினும் கொடியவன். நஞ்சினும் கொடியனாவன் என்பதையெண்ணிச் செய்யா திருக்கின்றாய் என்பது ஒன்று; விரும்பினேனாயினும், கொடியவனாதலை யெண்ணி அருளாதிருக்கின்றாய் என்பது மற்றொரு பொருள். இம்மை யம்மைக்குரிய நலம் பலவும் பெறுதற்குள்ள எனது விருப்பத்தையும், திருவருளால் ஞானவொழுக்கங்கட்கு வேண்டும் அறிவு மனங்களின் வன்மையைப் பெறற்குள்ள என்னுடைய விருப்பத்தையும் நீ நன்கு அறிவாய் என்பாராய், “நன்மை யெய்தவோ வன்மையுற்றிடவோ இச்சை நன்றறிவாய்” என இசைக்கின்றார். என்பாலுள்ள கொடுமைத் தன்மை நீ அருள் செய்யாமைக்கு ஏதுவாயின் இனியதனைப் பொறுத்து ஆளுவதை விடுத்து அருளாதொழிதல் கூடாதென முறையிடுவாராய், “யான் செய்த தென்னே” எனக் கூறுகின்றார். மனம் கோடியதுண்டே யன்றிக் கொடுஞ்செயல் ஏதும் புரிந்திலேன் என்றற்கு யான் செய்தது என்னே என்கின்றா ரெனினும் அமையும்.
இதனால், மனம் கொடியனாயிருந்தமை மாறி, நின்னை நச்சி மெச்சி வாழ்வேனுக்கு அருளாமை என்னே என முறையிட்டுச் செயலறுதியுற்ற வாறாம். (5)
|