1327. மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி
வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
கூறு கின்றதென் என்றயர் கின்றேன்
குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி
ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம்
இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே
தேறு கின்றனன் என்செய்கேன் நினது
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
உரை: வள்ளலாகிய சிவபெருமான் இன்னும் வந்திலனே என்று நினைவு மாறுகின்ற யான், இனி நெஞ்சில் அது நினைந்து பேசுவானேன் எனத் தளர்கின்றேன்; உடனிருந்து அன்பு குலவிப் பேசித் தேறுதல் உரைப்பவர் இல்லாமையால், கவலையாகிய குன்றேறி வருந்துகின்றேன்; எமது இறைவனாகிய பெருமான் இரக்கம் நிறைந்தவன்; இப்பொழுது திருவருளை நல்குவன் எனச் சித்தத் தெளிவேறி விளக்கமுற்றேன்; வேறு நான் என்செய்கேன்; நின் திருவுள்ளப்படி எல்லாம் ஆவதன்றி யான் செய்யலாவது ஒன்றுமில்லை. எ.று.
வள்ளற் பெருமானாகிய சிவபெருமானது அருள் வரவை நினைந்து நினைந்து வாராமையால் நெஞ்சம் வேறு நெறியிற் செல்லுமோ என அஞ்சி நினைவு தடுமாறுகின்றேன் என்பார், “மாறுகின்றனன் நெஞ்சகம் அஞ்சி” எனவும், இத்துணையும் வாராமையின், வந்தருளுவன் என எண்ணிப் பலபடப் பேசித் தெருமருளுவது பயனில் செயலாமென்றெண்ணி, மனந் தளர்கின்றே னென்பார், “இத்துணை வந்திலன் இனிமேல் கூறுகின்ற தென் என்றயர்கின்றேன்” எனவும் மொழிகின்றார். தனித்திருந்து தளர்பவர்க்குத் தன்மை யறிந்து தெளியத் தகுவன கூறுவார் ஒருவரும் உடன் இல்லாமையான், துன்பம் மிகுகின்றேன் என்பார். “குலவித் தேற்றும் அக்கொள்கையர் இன்றி ஏறுகின்றனன்”என்றுரைக்கின்றார். “ஏறுகின்றனன்” என்ற குறிப்பால் கவலைக் குன்று என்பது வருவிக்கப்பட்டது. இரக்கத்தால் உள்ளுருகுவார்க்கு இரக்க நினைவே மிக்குத் தோன்றுதலின், அருள் செய்யா விடினும் அருள் பெருக உடையன் இறைவன் என்ற எண்ணமே மீதூர்ந்து, இன்று வரை நல்கானாயினும், இன்று நல்கா தொழியான் என்பார், “இரக்க முள்ளவன் இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே தேறுகின்றனன்” என உரைக்கின்றார். “மாலை வாராராயினும் காலை காண்குவம்” (சிலப். வேனில்) எனக் காதல் அன்புடையார் தம்முள் கூறிக்கொள்வது இயல்பென அறிக. மேலொன்றும் செய்தற் கின்றிக் கையற வெய்துவார், “என் செய்கேன்” எனவும், யாவும் அவன் திருவுள்ளப் பாங்காகுமே யன்றி, அவனை நியமிப்பாரில்லை யென்பார், “நினது அன்றி யான் செய்குவதிலையே” எனவும் மொழிகின்றார்.
இதனால், அன்பு முதிர்ச்சியாற் கையறவு பட்டுத் தன் செயல் நீத்தல் கூறியவாறாம். (8)
|