133.

    எண்ணில் புன்றொழில் எய்தி ஐயவோ
        இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
    கண்ணினுள் மணியாய நின்றனைக்
        கருதி டாதுழல் கபட னேற்கருள்
    நண்ணி வந்திவன் ஏழையா மென
        நல்கி யாண்டிடல் நியாயமே சொலாய்
    தண்ணிரும் பொழில் சூழும் போரிவாழ்
        சாமியே திருத்தணிகை நாதனே.

உரை:

     குளிர்ந்த பெரிய சோலைகள் சூழ்ந்த போரூரில் எழுந்தருளும் தணிகை மலை நாதனே, எத்தனையோ பல புல்லிய தொழில்களைச் செய்து இயல்புக் கேற்ப உலக வாழ்க்கையில் நடந்து அறிவும் மனமும் மயங்கிக் கண்ணின் மணி போன்ற உன்னை நினைக்காமல் வருந்துகின்ற கபடனாகிய என்பால் அருள் கூர்ந்தருளி இவனோர் ஏழையாகும் என்று திருவுள்ளத்திற் கொண்டு அருள் புரிதல் நீதி யாகுமன்றோ, உரைத்தருள்க, எ. று.

     கடுங்கோடையிலும் இனிய நிழல் பயந்து குளிர்ந்திருத்தல் பூம் பொழில்கட்கு இயல்பாதலால், “தண்ணிரும் பொழில்” என்று சிறப்பிக்கின்றார். சாமி - முருகன். உலகிற் பிறந்த உயிர்கள் தத்தம் இயல்புக் கேற்ப வாழ்க்கை நடத்துவது முறையாதலின் “இயல்பின் வாழ்க்கையில் இயங்கி” எனவும், அவ்வாறு வாழுமிடத்தும் துன்பங்கள் தொடர்ந்து போந்து மனத்தை மயக்குவது கண்டு “மாழ்கி” எனவும், அம்மயக்கத்தால் ஞான மருந்தாகிய நின் திருவடிகளை மறந்தொழிந்தேன் என்பாராய், “நின்றனைக் கருதிடாது” எனவும், ஏனை உலகியற் பொருள் நுகர்ச்சியை மறவாமலும், அது புறத்தே தெரியாமல் மறைத்தும் கள்ளமுடையனாய் நிலவினேன் என்பாராய், “உழல் கபடனேன்” எனவும் உரைக்கின்றார். கபடன் - உள்ளத்தே பல தீய நினைவுகளைக் கொண்டு ஒழுகுபவன்; “கரவாடும் வன்னெஞ்சர்” என்று கபடுடையவர்களைத் திருநாவுக்கரசர் குறிப்பர், கபடு, கவடு என்பதன் வேறுபாடு. அறிவுக்கறிவாய் நின்று நுண்மை யுணர்த்தும் பெருமானாகிய அருமை பற்றி முருகப் பெருமானைக் “கண்ணினுண் மணி” என்று கூறுகின்றார். முருகனுடைய அருமை பெருமைகளைத் தெரிந்து மறந்த குற்றத்தைப் பொறுத்து அறிவதறியும் அறிவில்லாத ஏழை யெனத் திருவுள்ளம் கொண்டு நல்லருள் புரிகுவது நினக்கு நீதி யன்றோ என்று விண்ணப்பிப்பாராய், “அருள் நண்ணிவந்து ஏழையாம் என நல்கி யாண்டிடல் நியாயமே சொலாய்” என்று முறையிடுகின்றார்.

     இதனாற் கண்ணினுண் மணியாய்க் காணத் தகுவன காட்டி யுய்விக்கும் முருகனை வாழ்க்கைத் துன்பத்தால் மயங்கி மறந்த குற்றத்தைப் பொறுத்துத் திருவருள் செய்க என முறையிட்டவாறாம்.

     (3)