1331. ஊழை யேமிக நொந்திடு வேனோ
உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
உரை: பொன் போன்ற திருமேனியையுடைய சிவபெருமானே, பயன் நுகர்வித்தற்காக ஊழ்த்திருக்கும் பழவினையை நோவதா? மனத்தை நோவதா? உலகியலிற் கலந்திருந்து வாழ்வாரை மயக்கும் மாயையைப் பயன் தருமொன்றா மென்று எண்ணிப் பாவம் பலசெய்துள்ள பாவியாகிய யான், அதனை நினைந்து வருந்துகின்றேன்; வருந்துகிற என்பால் மனமிரங்கி, என் பாவ வினை கெடுமாறு, யான் நரகம் புகும்போது எழுந்தருளி வந்து என்னை ஆட்கொண்டருளுக. எ.று.
பொன் மேனியன் எனப்படுதலால், “மாழையேர் திருமேனி யெம் பெருமான்” என்று புகழ்கின்றார். மாழை - பொன். “பொன் போல மிளிர்வதோர் மேனியினீர்” (அதிகை) எனத் திருநாவுக்கரசர் பாடுவர். செய்வினை, தன்னைச் செய்தான் தன் பயனை நுகருங்காறும் ஊழ்த்திருக்கும் நிலையில் ஊழ்வினை யெனப்படும். “நுண்கொடிப் பீரத்து ஊழுறுபூ” (நற். 326) என்றாற்போல. ஊழுறு வினை, ஊழ்வினை யாயிற்று. நுகர்வித்தற் குரிய கால மெய்தியபோது செய்தவன் விரும்பினும் விரும்பாவிடினும் பயனை நுகர்வித்தே கழிதலின், “ஊழையே மிக நொந்திடுவேனோ” எனவும், நுகர்ச்சிக் கேற்ற நினைவு செயல்களைத் தோற்றுவித்தலின் “உளத்தை நோவனோ” எனவும் உரைக்கின்றார். “பரியினும் ஆகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம” (குறள். 376) எனப் பெரியோர் உரைப்பது அறிக. இறைவனுக்குப் பரிக்கிரக, சத்தியாய் இன்ன தன்மைத்தெனத் தெளியவுரைபடாமை பற்றி, மாயை “பாழ்” எனப்படுவ துண்டு. காரிய வடிவாய்க் காரணமாகிய தன்னைக் காட்டாமை பற்றி, உலக காரணமாகிய மாயையை “உலகிடை மயக்கும் பாழ்” என்கின்றார் திருமூலர். “காரியம் ஏழ்கண்டு அறும் மாயப் பாழ்” (திருமந். 2495) என்பது காண்க. மாயப்பாழ் வியோமப்பாழ், உபசாந்தப்பாழ் என மூவகையாக ஞான நூலார் காண்பர். கணக்கியலில் சூனியத்தைக் குறிக்கும் 0 என்ற எண் பெரிதும் சிறிதுமாக எண்ணப்படுதல் போல என வுணர்க. மாயா காரியமான உலகப்பாழ் இன்பமும் பயனும் தருவது போல நின்று மயக்கி நிலையின்றி மாய்வதாகலின், “பாழையே பலன் தருவது என்றெண்ணிப் பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன்” எனப் பகர்கின்றார். படர் - நினைந்து நினைந்து வருந்தும் துன்பம். தீ்ய பயனே விளைவிக்குமாறு கண்டு “பாவியேன்” என வருந்துகிறார். இத் துன்பங்கட்குக் காரணம் விடாது தொடரும் வினையாதலால், “வல்வினை கெட” எனவும், வினைப் பயனைச் செய்வானொடு கூட்டி நுகர்விப்பது இறையருளாதலின், அவன் மனம் வைத்தால் வினைத் தொடக்கினின்று விடுவிக்கலாம் என்ற நோக்கத்தால், “மனம் இரங்கி என் வல்வினை கெட ஏழையேற்கு அருள்க” என வேண்டுகிறார். மனமிரங்கி அருளா தொழியின் வினைப்பயற் கிரையாய் நரகத்திற் கிடந்து இடர்ப்படுவேன் என்பார், “அருளா யெனில் அந்தோ நரகிடை யிடும்போது என்செய்கேன்” என மொழிகின்றார். செல்வ னொருவன் பெருங் குற்றம் செய்து சிறை புகும்போது ஏழையாவது போலத் தாமுமாதல் புலப்பட “ஏழையேன்” என்கிறார்.
இதனால், வல்வினைத் தொடக்கறுத்து நரகத்தி லிடர்ப் படாவகை அருள் செய்க என வேண்டியவாறாம். (2)
|