1332.

     ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்
          யாவும் நீஎன எண்ணிய நாயேன்
     மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்
          மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்
     சான்று கொண்டது கண்டனை யேனும்
          தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை
     ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ
          என்செய் கேன்நர கிடைஇடும் போதே.

உரை:

      பெற்று வளர்த்த என் தந்தையும் தாயும் யாவரும் நீ யென்றே நினைத்திருந்த நாயேன், மயக்கத்தைத் தரும் வஞ்சம் பொருந்திய வாழ்க்கை யுண்டு பண்ணும் மயக்கத்தால் வன்செயல் பல செய்துள்ளேன்; பலவாகிய சான்றுகளைக் கொண்டு நீ அவற்றைக் கண்டுகொண்டா யெனினும், தமியனாகிய என்பால் அருள்கொண்டு என்னை யுன்னுடைய அடியவருள் ஒன்றாக ஏற்றுக் கொள்ளாயாயின், முடிவில் வாழ்வின் நரகம் புகும்போது, ஐயோ, நான் என்ன செய்வேன். எ.று.

     “அம்மையப்பரே யுலகுக்கு அம்மையப்பர்” (களிறு) என்று சான்றோர் அறிவுறுத்துவதால், “ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன்” எனக் கூறுகின்றார். ஞானசம்பந்தரும், “தாயானே தந்தையுமாகிய தன்மைக ளாயானே” (காறா) என வுரைப்பர். பெற்ற மக்கள் செய்யும் பிழையாயின வற்றைப் பெற்ற தந்தையும் தாயும் பொறுப்பர் என்ற கருத்தால், தவறுகள் பல செய்தேன் என்பது கருத்து. பெற்றோரது பெருமை குன்றாவாறு பிழை செய்யா தொழிவது பெருந்தன்மையென்பது உணரேனாயினேன் என்பார், “நாயேன்” எனத் தம்மை இழிக்கின்றார். மாயா காரிய மாதலால் மயக்கி வஞ்சிப்பது வாழ்வின் இயல்பெனக் காணேனாயினேன் என்றற்கு, “மான்று கொண்ட இவ் வஞ்சகவாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன்” எனக் கூறுகின்றார். மான்று, மால் என்பதனடியாகப் பிறந்த தெரிநிலை வினையெச்சம். இனியது போலத் தோன்றித் துன்பம் நல்குதலாய் வஞ்சக வாழ்வு எனப்படுகிறது. வன்மை, வன்சொல்லும் வன்செயலும் அடங்கப் பொதுவாய் நிற்கிறது. “வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர் வாழ்வு தந்தார்” (நாவ) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. தெளியக் கண்டறிந்தமை புலப்பட, “சான்று கொண்டது கண்டனை” எனச் சாற்றுகின்றார்; எனவே யான் அவற்றை மறைக்கவோ மறுக்கவோ ஒண்ணாது என்றாராயிற்று. இந்நிலையில் எனக்காக நின் திருமுன்னின்று பரிந்து பேசுவார் ஒருவருமில்லை யென்றற்குத் “தமியனேன்” என்றும், நீயே அருட்கண் கொண்டு என்னை நோக்கி யருளப் பிழை பொறுத்து ஆண்டருள வேண்டுமேயன்றி, நரகத்தில் இடர்ப்படும் எனக்கு வேறு ஆதரவு இல்லை என்பார், “தயவு கொண்டு என்னை ஏன்று கொண்டு அருளாயெனில் அந்தோ நரகிடை யிடும்போது என் செய்கேன்” என்றும் வருந்துகின்றார்.

     இதனால், உலக மயக்கால் வஞ்சிக்கப்பட்டு நரகடையும் எனக்கு நீயே ஆதரவு செய்தருள வேண்டுமென இறைஞ்சியவாறாம்.

     (3)