1334. தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
தீய ராதியில் தீயன்என் றெனைநின்
திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
உரை: முன்னை நாளில் ஏயர் கோனுக்குத் திருவருள் நல்கிய பெருமானே, பெற்றெடுத்த தாய் தந்தையரும் மக்களின் செயல் கண்டு பொறாது மனம் சலிப்பதுண்டு; உறவினரும் உறவு முறை விடுத்து ஒருவுத லுண்டு; நண்பராயினார் நட்பு மறந்து நீங்கி விடுவதுண்டு; உன்னை நம்பினபடியால் நம்பிக்கை குன்றாமல் நான் மனமகிழ்ச்சியுடனிருக்கின்றேன்; தீயவரினத்தில் மிக்க தீயவன் எனக் கருதி நின் திருவுள்ளத்திற்கு உரியவனாக நீ என்னைக் கொள்ளா தொழிந்தால், பின்பு என்னை நமன் பற்றிச்சென்று நரகத்தில் புகுத்தும்போது என்ன செய்வேன்? எ.று.
ஏயர்கோன், கலிக்காமர் என வழங்கப் படுவர்; சிவனை யல்லது பிறரை வணங்காத பேரன்பு சான்ற குடும்பத்தில் தோன்றியவர்; போர் வீரர்; திருவாரூரிற் பரவையார் மனைவிக்குச் சிவனைத் தூதனுப்பினார் நம்பியாரூரர் என்ற செய்தி கேட்டு அருவுருப்புற்று, அவரைக் கண்ணாற் கண்டல் கூடாதென்ற உறுதி கொண்டவர். திடீரென அவர்க்குச் சூலை நோய் வந்ததாக, நம்பியாரூரர் வந்தால் அது தீரும் என அறிஞர் சொல்ல, அது கூடாதென மறுத்திருந்தார் கலிக்காமர். இச் செய்தி யறிந்த நம்பியாரூரர் தாமே புறப்பட்டு அவ்வூர்க்கு வருவாராயினார். செய்தியறிந்த கலிக்காமர் உறுதிகெடாமல் உடைவாள் கொண்டு தம் வயற்றிற் குத்திக் கொண்டு வீழ்ந் தொழிந்தார். அதற்குள் நம்பியாரூரர் மனைநோக்கி வருவது தெரிந்த மனைவியார், கலிக்காமர் உடலை மறைத்துவிட்டு, ஆரூரை இனிது வரவேற்றார். கலிக்காமரைக் காணவேண்டி வற்புறுத்திய நம்பியாரூரர்க்கு மனைவியார் நடந்தது கூறலும், நம்பியாரூரர் தாம் தம்மைக் குத்திக் கொள்ளப் போனார்; கலிக்காமர் இறையருளால் உயிர் பெற்றெழுந்து நம்பியாரூரர் கையைப் பற்றிக் கொண்டார். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பராகி இறைவன் திருவருளை வியந்து பரவினர். இந்தச் செய்தியையே, “ஏயர் கோனுக்கு அன்றருளும் எம்பெருமான்” என வள்ளற் பெருமான் புகழ்கின்றார். மக்கள் எத்துணைத் தவறு செய்யினும் பெற்றோர் மனம் சலிக்காது என்பது உலகுரை; அத்தகைய தாயும் ஓரோருகால் தவறு காணின் சலிப்பாள் என்பார், “தாயராதியர் சலிப்புறு கிற்பார்” என்றும், பொருளில்வழிச் சுற்றம் கைவிடும் என்பது பற்றி, “தமரும் என்றனைத் தழுவுறல் ஒழிவார்” என்றும் உரைக்கின்றார். ஆதியார் என்பது, முதியோர் என்னும் பொருளது. நண்பர், துணைவர் முதலியோர் உட்பட, “நேயராதியர்” என்கின்றார். நீ எவ்வகையிலும் நீங்காமையோடு நீக்க மாட்டாமையு முடைய னென்பார், “நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன்” என உரைக்கின்றார். தீயவர் பல வுண்மை விளங்கத் “தீயராதியில் தீயன்” எனச் செப்புகிறார். எத்துணைத் தீயவனும் செம்மை நெறி கண்டு சிவனை நினைப்பானாயின் விலக்கப்படா னென்பது தோன்ற, “சேர்த்திடா தொழிந்தால்” எனவும், சேர்க்கா விடில் சிவநெறியாளன் ஒருவன் நரகம் புகுந்தானெனும் ஒரு பழி யுண்டாம் என்பார் போல, “என்செய்கேன் நரகிடை யிடும் போதே” எனவும் புலம்புகிறார்.
இதனால், நம்பியிருக்கின்ற என்னைக் கைவிடாது திருவுள்ளத்திற் கொள்ளவேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (5)
|