1335. முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
மோக வாரியின் மூழ்கின னேனும்
அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
அப்ப நின்அருள் அம்பியை நம்பித்
தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
உரை: முன்னைச் செய்த வலிய வினைப் பிணிப்பாலே மோகமாகிய கடலில் வீழ்ந்து மூழ்கினேனாயினும், அன்னை போலவும் தந்தை போலவும் அரிய உயிர்த்துணை போலவும் உதவி புரியும் நின்னுடைய திருவருளாகிய புணையை விரும்பிப் பற்றித் தனக்குத் தானே ஒப்பு எனப்படுவதாகிய சிவஞானம் என்ற கரையை யடையலாம் என்ற பெருமிதத்துட னிருந்தொழிந்தேனாக, இப்பொழுதும் உனது திருவருளை நல்கவில்லையாதலால் பின்னாளில், நரகிற் புகும்போது யாது செய்வேன்? எ.று.
முற்பிறப்பிலும் முன்னை நாட்களிலும் மன மொழி மெய்யெனும் கரணங்களால் யான் செய்த வினைத் தொடக்கினால் பயன் நுகர்வித்தற்கு விளைந்த மயக்கத்தில் மூழ்கி அறிவயர்ந்தேன் என்பார், “முன்னை நான் செய்த வல்வினைச் சிமிழ்ப்பால் மோகவாரியில் மூழ்கினேன்” என உரைக்கின்றார். சிமிழ்த்தல் - பிணித்தல். பறவை வேட்டுவர் புள்ளினங்களை வலைவீசிப் பிணித்தலைச் சிமிழ்த்தல் என்பர். “புதல் மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று” (குறள். 274) என வருதல் காண்க. மோகம் - மயக்கம்; இதனை அசத்து என்று குறித்து, “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” (சிவ. போ) என்பர் மெய்கண்ட தேவர். அம் மோகம் எல்லையின்றி நாளும் பெருகிய வண்ணமிருத்தலின், அதனைக் கடல் எனக் காட்டுகின்றார். எனினும் அதனைக் கடத்தற்கு இறைவன் திருவருளே பெரும் புணையா மென்பது அறிஞர் கண்ட வுண்மையாதலின், மோகக்கடலில் மூழ்கினனேனும், “ஆருயிர்த் துணையாம் அப்ப நின்னருள் அம்பியை நம்பி” எனவும் அது கொண்டு நீந்துவோர் சிவஞானமாகிய திண்ணிய கரையை யடையலாம் என்பதுபற்றி, “சிவஞான மென்கரையைச் சார்குவேமெனும் தருக்குடன் உழன்றேன்” எனவும் இயம்புகின்றார். மக்கள் மயங்குவது காணத்தரியாத அன்னைபோல அருள்வடிவாய சிவபிரான் திருவருள் நெறியைக் காட்டியருளுதலால், “அன்னை போலும் என் ஆரூயிர்த் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி” எனக் கூறுகிறார். அம்பி - புணை. திருவருளாகிய அம்பி, அருளம்பி எனப்பட்டது. சி்வஞான மெய்தினோர் சிவத்தின் திருவடி சேர்தல் ஒருதலையாதலால், “சிவஞான மென் கரையைச் சார்குவே மென்னும் தருக்குடன் உழன்றேன்” என இசைக்கின்றார். “ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்” (சூ. 8 : 11) எனச் சிவஞான சித்தியார் தெரிவிப்பதறிக. தருக்குதல், ஈண்டுத் துன்பத் துளக்கமின்றி எங்கெழில் என் ஞாயிறெமக்கு என இறுமாத்தல்; “எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கணில்லோம் எங்கெழிலென் ஞாயிறு எளியோமல்லேம்” (அப்பனீ அம்மைநீ) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. “எங்கெழி லென் ஞாயிறென இன்னணம் வளர்ந்தோம்” (சீவக. 1793) என்று திருத்தக்க தேவரும் இப்பொருளே தோன்ற வழங்குவ தறிக. உழலுதல், ஈண்டுக் கவலை யின்றித் திரிதல் மேற்று. இங்ஙனம் உழன்ற எனக்கு நினது திருவருள் துணையை இன்னும் நல்கவில்லையே என வருந்துவாராய், “இன்னும் நின்னருள் ஈந்திலை அந்தோ” என்றும், இந்நிலை தொடருமாயின், நாளை நமன் கைப்பட்டு நரகம் புகும்போது யாது செய்வேன் எனத் துயருறுவாராய், “என் செய்கேன் நரகிடை இடும்போதே” என்றும் இனைகின்றார்.
இதனால், திருவருட்டுணை எய்தாமை நினைந்து துயர்ப்படுவது தெரிவித்தவாறாம். (6)
|