1337.

     கல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான்
          கடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல்
     இல்லை நல்லைநின் அருள்எனக் கதனால்
          இல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான்
     அல்லை இல்லையால் அருள்தரா திருத்தல்
          அடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே
     எல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன்
          என்செய் கேன்நர கிடைஇடும் போதே.

உரை:

      வன்மைத் தன்மையில் கல்லினும் மிக்கதாகிய என மனம், கடவுளாகிய நின்னுடைய திருவடித் தாமரைகளை நினைப்பதில்லை; எல்லாவகையினும் நல்லவனாகிய உனது திருவருள் அதனால் எனக்கு எய்துவதாக இல்லை; என்பாலும் உனக்கு அருள் இல்லையாயிற்று; நீயே இரக்கமில்லாதவனும் அல்லை; அருளைச் செய்யாதவனும் அல்லை; அடியவனாகிய என்னைப் பொறுத்த வளவில்தான் அருளில்லையெனின் என் துன்பத்துக்கு அளவில்லை; அதனை நினைத்து நெஞ்சம் பதைப்பதுடன் நாளை நரகம் புகும்போது என் செய்வ தென்று எண்ணிக் கலங்குகின்றேன். எ.று.

     இறைவனே, நின்னுடைய திருவடிக் கமலங்கள் நினைத்தற்கினிமையும் மென்மையும் நன்மையும் வாய்ந்த தாமரை மலர் போன்றவையாக, யான் அவற்றை நினைப்பதில்லை என்பார், “கடவுள் நின்னடிக் கமலங்கள் நினைத்தல் இல்லை” எனவும், நினையாமைக்குக் காரணம் கல்லினும் வன்மைத்தாகிய மனத்தின் தன்மை என்பார், “கல்லை வெல்லவும் வல்ல என் மனம்தான்” எனவும் கூறுகின்றார். இறைவனுடைய உருநலம் நினைந்தருளும் நம்மாழ்வார், தாமரை மலரின் நலத்தையும் உடன் நினைந்து, “செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம், செந்தாமரை யடிகள் செம்பொன் திருவுடம்பே” (திருவாய் : 2 : 5 : 1) என்பது காண்க. உனது திருவுள்ளம் அருணலமே நிறைந்ததென்றற்கு “நல்லை” என்றும், அதனால், மாறுபட்ட எனக்கு அந்தத் திருவருளை நல்குதல் ஆகா தென்று எண்ணினை என்பாராய், “நின்னருள் எனக்கு அதனால் இல்லை” என்றும், உன்னைப் பொறுத்த அளவில் இரக்கமே யுருவாயவன், தக்கார்க்குத் தடையின்றி அருளை வழங்குபவன் என்பாராய், “நீ இரக்கமில்லாதானும் அல்லை”, “அருள் தாரா திருத்தலும் இல்லை” என்றும் ஆராய்ந் துரைக்கின்றார். இல்லை இல்லை யென இரட்டித்தது வற்புறுத்தற்கு. இரக்கமே யில்லை போலும் என்றெழும் எண்ணத்தை மறுத்தற் பொருட்டு, “அல்லை” என்கிறார். இத்துணை யாராய்ச்சி வேண்டா, அடியவனாகிய உன்பால் தான் அருள் செய்தற்கில்லை என்பதாயின், எனக்கெய்தும் துன்பத்துக் களவில்லையாம் என்பார், “அருள்தரா திருத்தல் அடியனேன் அளவாயின்” எனவும், அதனால் எனக்கு எய்தும் துன்பம் எல்லை யற்றதாம் என்பார், “இங்கு இடர்க்கே எல்லையில்லை” எனவும், இதனால், என் மனம் படும் பாட்டினை என்னென்றுரைப்பேன் என்பார், “உளம் பதைக்கின்றேன்” எனவும், அருள் பெறாதார் நரகத்தில் படும்பாடு சொல்லற் கரிதென நூலோர் கூறுவதை நினைந்து துன்புறுமாறு புலப்பட, “என்செய்கேன் நரகிடை யிடும்போதே” எனவும் எடுத்துக் கூறுகின்றார்.

     இதனால், திருவருள் பெறாவழி எய்தும் துன்ப மிகுதி சொல்லியவாறாம்.

     (8)