1338.

     பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
          போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
     இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
          ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
     தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
          தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
     எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
          என்செய் கேன்நர கிடைஇடும் போதே.

உரை:

      எங்கும் எல்லாமாய் இருப்பவனே, மிகுகின்ற மாயை செய்யும் வஞ்சத்தில் மனத்தைச் செலுத்தி வருந்துவதும், இவ்வுலகிற் பெரிய சிங்கவேற்றின் முன் கரிய யானை தாக்கப்படுவது போல், ஐம்புலன்களாகிய பகைப்பொருளின்முன் நான் தாக்குண்டு வருந்துவதும், வாழ்க்கையாகிய துன்பக் கடலில் ஆசையெனப்படும் முதலை பற்றி இழுத்தலால், மீளமாட்டாமல் வருந்துவதுமாகிக் கலங்கியேங்கும் என்னை நீ நன்கு அறிந்திலை போலுமாதலால், நாளை நரகக் குழியில் தள்ளப்படும் போது என்ன செய்வேன்! எ.று.

     உலகிற்கு முதற் காரண மூலப்பொருளாதலின், அதன் பெருக்கத்தைப் “பொங்கும் மாயையின் புணர்ப்பு” என்றும், அதன் காரியமான பொருள் வகையில் நுண்ணிதாகிய மனம் சென்று தோய்வது விளங்க, “புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும்” என்றும் கூறுகின்றார். புலன்களால் அவ்வுள்ளமும் அதன் உள்ளுறையும் உயிரும் தாக்குறும் திறத்தை “மாலரி யேற்றின்முன் கரி போல் ஏங்குகின்றது” என உரைக்கின்றார். புலன்கள்மேற் செல்லும் ஆசையால் உயிர் அலைப்புண்ணும் திறத்தைத் 'தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத் தவிப்பில் நின்றது” என விளக்குகின்றார். எங்குமாகி யிருத்தலால் எண்ணிறந்த கோடி யுயிர்களில் என்னைக் காணா தொழிந்தனையோ என்பார்போல “தமியேன் தனையும் அறிந்திலையோ” என வினவுகின்றார். நீ காணாமையால் யான் எய்தும் துன்பம் இது வென்பார், “என் செய்வேன் நரகிடை யிடும்போது” எனக் கூறுகின்றார்.

     இதனால், அருட்கண் கொண்டு தன்னை நோக்காமை சொல்லி வருந்தியவாறாம்.

     (9)