134.

    கூவி யேழையர் குறைகள் தீரவாட்
        கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
    பாவியேன்படும் பாடனைத்தையும்
        பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய்
    சேவியே னெனிற் றள்ளல் நீதியோ
        திருவருட் கொரு சிந்து வல்லையோ
    தாவி யேர்வளை பயில்செய் போரிவாழ்
        சாமியே திருத்தணிகை நாதனே.

உரை:

     அழகிய சங்குகள் பரந்து திரியும் வயல்களையுடைய போரூரில் உள்ள சாமியே, தணிகை நாதனே, போதிய ஞானமில்லாத ஏழை யன்பர்களைக் கூப்பிட்டு அவர்களுற்ற குறைகள் நீங்கும் வண்ணம் ஆட்கொள்ளுகின்ற வள்ளற் பெருமானே, கணந்தோறும் குறைந்து கொண்டு போகும் உலக வாழ்க்கையில் பாவியாகிய யான் படுகின்ற துன்பங்கள் யாவையும் கண்ணாரக் கண்டும் நீ அன்பு கூர்ந்து எளியேன் முன் வருகின்றாய் இல்லையே; திருமுன் வந்து நாடோறும் வணங்கி வழிபடுவது இல்லாதவனாயினும் என்னைப் புறக்கணிப்பது நினக்கு அறமாகாது; திருவருட்கு நீ ஒரு கடல் அல்லவா? எ. று.

     தாவுதல் - பரந்து மேய்தல். வளை - சங்கு. செய் - வயல்; நன்செய் புன்செய் என வழங்குதல் காண்க. ஏழை- அறிவதறியும் அறிவில்லாதவர். அவர்கள் தாமே அறிந்து போதருவ தில்லாமை கண்டு அன்புடன் கூவி யழைத்துப் பணி கொள்ளுவது பற்றிக் “கூவி ஏழையர் ஆட்கொள்ளும் வள்ளலே” என்று சிறப்பிக்கின்றார். “கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி” (சதகம்) என மணிவாசகர் உரைப்பது காண்க. குறைகள் மிக்கு அறிவு அறைபோகி மனவலி கெட்டுத் துன்புறாதபடி காக்கும் வகையில் ஆட் கொள்ளுகிறான் முருகப்பெருமான் என்பதற்குக் “குறைகள் தீர ஆட்கொள்ளும்” என்று கூறுகிறார். பிறப் பிறப்புக்கு இடை நிற்கும் காலம் வாழுங் காலமாகும்; அது நாடோறும் குறைந்து கொண்டேயிருப்பது பற்றிக் “குறுகும் வாழ்க்கை” எனக் குறிக்கின்றார். திருவள்ளுவரும் “நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும், வாளது உணர்வார்ப் பெறின்” (குறள்) என அறிவுறுத்துவது காண்க. பாவ வினைகள் செய்வதும், அவற்றின் பயனாகத் துன்பங்களை உறுவதும் மக்களின் செயலா யிருப்பது கண்டும் மனமிரங்கி அவற்றின் பிணிப்பினின்றும் நீங்கி யுய்தற்கு வேண்டும் அறிவு தந்தாதரித்தல் வேண்டும் என்பாராய்ப் “பாவியேன் படும் பாடனைத்தையும் பார்த்திருந்தும் பரிந்து வந்திலாய்” எனவும், இரு போதும் நாடோறும் நின் திருவருளை நினைந்து அன்பால் வணங்கி வழி படேன் என்ற காரணம் பற்றி என்னைப்புறக்கணித் தொதுக்குவது அறமாகாது என்று கூறுவாராய்ச் “சேவியேன் எனில் தள்ளல் நீதியோ” எனவும் முறையிடுகின்றார். குறைவிலா நிறைவாய்க் கொளக் குறைபடாத அருட் கடலாதலால் அருள் வழங்குக என்பாராய்த் “திருவருட் கொரு சிந்து அல்லையோ” என விளம்புகிறார். சிந்து - கடல்.

     இதனால், குறை தீருமாறு கூவி யழைத்துப் பணி கொண்டருளும் பெருமானாகிய நீ யான் படும் பாடனைத்தையும் விரைந்து போக்கற்குத் திருவருள் வழங்குக என விண்ணப்பித்தவாறாம்.

     (4)